Saturday, January 12, 2013

தர்பூசணி பழமும், பயன்களும்...!!


தர்பூசணி பழம் சாப்பிட சுவையானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் அதுவே கொடை வள்ளல்.

கோடைக் காலத்தில் இதன் விளைச்சல் பன்மடங்காக இருக்கும்.அந்தந்த சீசனில் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் பழங்களை மட்டும் சாப்பிட்டு விதைகளை தூக்கி எறிந்து விடுகிறோம்.விதைகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மையும் கூட.இப்பழத்தின் விதை வெள்ளரி விதையின் சுவையில் இருக்கும்.

கோடையில் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு.இது கொடி வகையை சார்ந்தது.அதனால் நீர்ச்சத்தும், விட்டமின்களும் அதிக அளவில் உண்டு.

இதில் பழம் மாத்திரம் அல்ல, இப்பழத்தின் தோல்,விதை, காய் என அனைத்தும் பயன் தரக் கூடியவை.

பழத்தை மட்டும் சாப்பிட்டு அதன் அடிபாகத்தை வீசி விடுகிறோம். பழங்களை கத்தியால் கீறி எடுத்துக் கொண்டு வெள்ளைப் பாகத்தை தயிர் பச்சடியாகவோ, பருப்பு போட்டு கூட்டாகவும் சமையல் செய்து சாப்பிடலாம்.

பழத்தை ஜூசாக செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.அதனுடன் சிறிது மிளகு-சீரகப் பொடி தூவியும் அருந்தினால் உடனேயே பசி எடுக்கும்.

கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு குளிர் பானங்கள் கொடுப்பதற்கு பதிலாக இப்பழ ஜூசை வடிகட்டாமல் கொடுக்க, வெயிலில் இழந்த சத்தை மீட்டுக் கொடுக்கும்.