Thursday, January 15, 2015

ஆம்பள திரை விமர்சனம்இதுவரை தமிழ்சினிமாவில் சொல்லப்படாத ‘பிரிந்த குடும்பம் ஹீரோவால் ஒன்று சேர்வது’ என்ற கதையைத்தான் இந்த ‘ஆம்பள’ படத்தில் கையிலெடுத்திருக்கிறார் சுந்தர்.சி.
விஷால், வைபவ், சதீஷ் ஆகிய மூவரும் பிரபுவின் பிள்ளைகள். அதேபோல் பிரபுவின் தங்கைகளான ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகிய மூவருக்கும் முறையே ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா ஆகியோர் மகள்கள். எதிர்பாராத சூழ்நிலை ஒன்றில் பிரபுவின் அப்பாவான விஜயகுமார் மரணமடைய, அது கொலைப்பழியாக மாறி பிரபுவை வீட்டை விட்டுத் துரத்துகிறது. ஏற்கெனவே தன் மகன்களான விஷாலையும், வைபவையும் பிரிந்த துன்பத்தோடு, இப்போது தங்கை குடும்பத்தையும் பிரிந்து வாடுகிறார் பிரபு.
பிரிந்திருக்கும் அப்பா பிரபுவுடனும், தம்பி சதீஷுடனும் ஒரு திடீர் சந்தர்ப்பத்தில் கைகோர்க்கிறார்கள் விஷாலும், வைபவும். தன் தங்கை குடும்பத்துடன் மீண்டும் தன் மகன்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் மூவரையும் மூன்று அக்கா மகள்ளை திருட்டுத்தனமாக கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி ‘சூப்பர்’ ஐடியா ஒன்றைக் கொடுக்கிறார் அப்பா பிரபு. பிறகு என்ன நடந்திருக்கும் என்பது காலம் காலமாக சுந்தர்.சி. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு விளக்கமாக சொல்லத் தேவையில்லை!
படம் பற்றிய அலசல்
தனது வழக்கமான பாணியைத்தான் இப்படத்திலும் கையாண்டு கலகலப்பூட்டிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. ஹியூமரோடு சேர்த்து கிளாமரையும் கொஞ்சம் தூவிவிடுவதுதான் அவரின் இன்னொரு டெக்னிக். இப்படத்தில் அதை கொஞ்சம் அதிகமாக தூவிவிட்டார்.
கூட்டத்திற்கு ஆள் அனுப்பும் கம்பெனி வைத்து நடத்தும் விஷாலுக்கும், ஹன்சிகாவுக்கும் உண்டாகும் காதலோடு படத்தை ஆரம்பிக்கிறார்கள். ஹன்சிகாவும், விஷாலும் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் சந்தானத்திற்கு ‘ஆப்பு’ வைக்க, எஸ்.ஐ.யாக இருக்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக வேலையைவிட்டே தூக்கப்படுகிறார். கிட்டத்தட்ட முதல் 40 நிமிடங்கள் நடக்கும் இந்த காட்சிகள் ரசிகர்களை இடைவிடாமல் சிரிக்க வைத்திருக்கிறது. அதன் பிறகு சந்தானம் காணாமல் போனாலும் திரும்பவும் க்ளைமேக்ஸில் வந்து கலகலப்பூட்டி படத்திற்கு சுபம் போடுகிறார்கள்.
முதல்பாதியைவிட இரண்டாம் பாதியின் ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் மெதுவாக நகர்வது, இரட்டை அர்த்த வசனங்கள், நெளிய வைக்கும் காட்சிகள், தவிர்க்க வேண்டிய இரண்டு பாடல்கள் ஆகியவை ‘ஆம்பள’யின் பலவீனங்கள். இருந்தாலும், ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் ‘பழகிக்கலாம்….’, ‘இன்பம் பொங்கும் வெண்நிலா ரீமிக்ஸ்’ இரண்டும் கலர்ஃபுல் கலாட்டா. ஒளிப்பதிவும் கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது!
நடிகர்களின் பங்களிப்பு
நடிப்பதற்கெல்லம் இப்படத்தில் யாருக்கும் பெரிய வேலையில்லை. இருந்தாலும் ஹீரோ விஷால் ரொமான்ஸ், ஃபைட் ஆகிய இரண்டு ஏரியாக்களிலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறார். ‘அரண்மனை’யில் பேயாக அலையவிட்ட ஹன்சிகாவை ‘ஆம்பள’யில் கிளாமர் குயினாக காட்டி சமாதானப்படுத்தியிருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோ நிச்சயமாக சந்தானம்தான். படத்தின் முதல் 40 நிமிடங்களையும், கடைசி 30 நிமிடங்களையும் ஒற்றை ஆளாக நின்று நகர்த்திக் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். மற்றபடி வைபவ், சதீஷ், பிரபு, ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, வில்லன் பிரதீப் ராவத் ஆகியோர் அவர்கள் சம்பந்தப்பட் காட்சிகளை நகர்த்துவதற்குத் தேவையான அளவு கை கொடுத்திருக்கிறார்கள். தெலுங்கு வரவுகளான மதூரிமா, மாதவி லதாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு காட்சிகள் கொடுக்கப்படவில்லை.

Wednesday, January 14, 2015

ஐ திரை விமர்சனம்னது உடலில் வைரஸை செலுத்தி அகோரமாக மாற்றிய ஒரு கும்பலை அதே பாணியில் தண்டிக்கும் ஒரு ஹீரோவின் கதைதான் ஐ.

அரதப் பழசான கதைதான். ஆனால் மேக்கிங்கில் சிகரம் தொட்டிருக்கிறார் சங்கர். படத்தில் மொத்தம் ஐந்து வில்லன்கள்.

ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றே தீருவது என்று கடினமாக உழைக்கும் லிங்கேசனாக சீயான் விக்ரம். தனக்கு போட்டியாக வருவானோ என்று விக்ரமை மிரட்டி வாபஸ் வாங்கச்சொல்லும் சக போட்டியாளர் ரவி (வில்லன் நம்பர்-1). இருவருக்குமான மோதலில் விக்ரம் ஜெயிக்கிறார்.

மாடலிங் துறையில் இந்திய அளவில் டாப்பில் இருக்கும் தியா (எமி ஜாக்சன்) மீது விக்ரமுக்கு செம கிரேஸ். தியாவுடன் நடிக்கும் ஆண் மாடல் ஜான் என்பவரால் (உபன் பட்டேல் -வில்லன் நம்பர்-2) அவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார். அவரை வெறுத்து ஒதுக்குவதால் பல விளம்பரப் படங்களிலிருந்து தியா கழட்டி விடப்படுகிறார். அந்த இடத்திற்கு விக்ரமை கொண்டு வருகிறார் தியா. சீனாவில் நடைபெறும் விளம்பரப் போட்டியில் லோக்கல் லிங்கேசனை ' லீ ' யாக மாற்றியதுடன், தன்  இதயத்திலும் இடம் கொடுக்கிறார் தியா. லீ-தியா ஜோடி இந்திய விளம்பர உலகில் கொடிகட்டி பறக்கிறது.ஜான் அனைத்து விளம்பர கான்ட்ராக்டிலி- ருந்தும் நீக்கப்படுகிறார். அதனால்தான்  ஜான் ' இரண்டாவது ' வில்லனாக மாறுகிறார்.

விக்ரமின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஓஜஸ் ராஜானிக்கு விக்ரம் மீது ஒருதலைக் காதல். தியாவுடன் கொண்ட காதலால், அந்த 'நயன்'தாராவை விக்ரம் வெறுத்து ஒதுக்க, அவர் ' வில்லன் நம்பர்- 3 ' இடத்துக்கு மூர்க்கமாக முன்னேறுகிறார்.  

விளம்பரப் படத்தில் நடித்தாலும் தனக்கென்று ஒரு பாலிசியை வைத்திருக்கிறார் விக்ரம். அதாவது கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களின் விம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்பதுதான் அப்பாலிசி. அதனால் தன்னை வளர்த்து ஆளாக்கிய விளம்பர நிறுவனத்தின் ஒனராகிய ராம்குமார்( நடிகர் திலகத்தின் மூத்த புதல்வன்) உடன் பகை வருகிறது. அதன்மூலம் வில்லன் நம்பர் -4 வது இடத்துக்கு அவர் போட்டியின்றி தேர்வாகிறார்.

ஐந்தாவதாக, கூட இருந்தே ஒருவர் குழி பறிக்கிறார். படத்தில் இருக்கும் ஒரே ஒரு டிவிஸ்ட் அது என்பதால் ஐந்தாவது வில்லனை தியேட்டரில் சென்று பாருங்கள். ' சைடு வாகு எடுத்து சாஃப்டா பேசினா சரத்பாபுனு நெனச்சியா..'  என்று அவரை அறிமுகப்படுத்தும் அந்த இடம் செம்ம.

இப்படி வில்லனாகிப் போன ஐந்து பேரும் தமிழ் சினிமா திரைக்கதைப்படி கடைசியில் ஒன்று சேர்கிறார்கள். விக்ரமை பொட்டுனு தீர்த்து விடக்கூடாது. அதுக்கும் மேல..அதுக்கும் மேல..அதுக்கும் மேல..ஏதாவது செய்யணும் என்று திட்டம் போடுகிறார்கள். அதுதான் விக்ரம் உடம்பில் ' I ' வைரஸை செலுத்தி அவரை உருக்குலைப்பது. அசத்தலாக இருக்கும் விக்ரம் அகோரமாக மாறுகிறார். அதனால் தியாவுடன் அவருக்கு நடக்கவிருந்த கல்யாணமும் நின்றுவிடுகிறது. அந்த ஐந்தாவது வில்லன் தியாவுக்கு மாப்பிள்ளையாக மாறுகிறார்

கடைசியில் அவர்கள்  மூலமாகவே தனக்கு நடந்த கொடூரத்தை அறியும் விக்ரம், அதே பாணியில் ஒவ்வொருவரையும் சாகடிக்காமல் 'அதுக்கும் மேல' அந்நியனை விட கொடூர தண்டனை வழங்குகிறார். 

முதல் பாதி ஏனோ ஜவ்வாக இழுக்கிறது. பிறகு நீளம் குறைக்கபடலாம். பாடல்களிலும் காட்சிகளிலும்  ஃபேர் அண்ட் லவ்லி , கில்லட் உள்ளிட்ட நிறைய அழகு சாதனப் பொருட்கள் வருவதால் விளம்பரப் படம் பார்ப்பது போன்று உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

சந்தானத்தின் காமெடி உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது. கடைசியில் உருக்குலைந்து கிடக்கும் வில்லன்களிடம்  சென்று தனித்தனியாக பேட்டி எடுப்பது செம ரகளை. பவர் ஸ்டார் கூட சில காட்சிகளில் வந்து பன்ச் டயலாக் அடித்து பரவசப் படுத்துகிறார்

தமிழ் சினிமாவின் பொக்கிஷமான விக்ரம் என்ற மகா கலைஞனின் உழைப்புக்காக ஒருமுறை பார்க்கலாம். 

Monday, January 12, 2015

பொங்கல் பண்டிகை முதல் முடிதிருத்துவதற்கான கட்டணம் உயர்வுதமிழக ஆண்கள் இனிமேல், தலைக்கு மேல செலவு அதிகரித்துவிட்டதாக கூறிக்கொள்ள வேண்டும் போல, ஏனெனில், தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகை முதல், முடிதிருத்துவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில், முடி திருத்தும் மற்றும் சவரம் செய்வதற்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. பொங்கலுக்கு பிறகு இக்கட்டண உயர்வு தமிழகம் முழுவதிலும் அமலுக்கு வருகிறது.

சங்கத்தின் மாநில தலைவர் முனுசாமி இதுகுறித்து கூறியது: கடை வாடகை, பணியாளர் சம்பளம், உபகரணங்களின் விலை போன்றவற்றின் அதிகரிப்பு காரணமாக, கட்டிங், ஷேவிங் கட்டணங்களும் கூட்டப்படுகிறது. 2 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இதுபோல கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பதால் வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். 

புதிய கட்டண உயர்வுப்படி, கட்டிங்கிற்கு ரூ.100, கட்டிங் மற்றும் ஷேவிங்கிற்கு ரூ.150 செலுத்த வேண்டிவரும். , ஷேவிங் மட்டும் என்றால் ரூ.60 கட்டணம். சிறுவர் கட்டிங், சிறுமியர் கட்டிங்கிற்கு கட்டணம் ரூ.100. மொட்டையடித்தலுக்கு ரூ.80 கட்டணம். தாடி ட்ரிம் செய்ய ரூ.60 கட்டணம். ஹேர் டையிங்கிற்கு ரூ.150ம், ஹேர் கலரிங்கிற்கு ரூ.200ம், பேஷியலுக்கு ரூ.150ம், தலை கழுவுதலுக்கு ரூ.40ம், முடியை உலர்த்த ரூ.40ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஏசி வசதி கொண்ட முடிதிருத்தும் நிலையங்களில் கட்டண உயர்வு மேலும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு ஏசி வசதி கொண்ட முடிதிருத்தும் நிலையத்தில், கட்டிங்கிற்கு ரூ.150, கட்டிங் மற்றும் ஷேவிங்கிற்கு ரூ.200, வெறும் ஷேவிங்கிற்கு ரூ.80 வசூலிக்கப்படும்.

Tuesday, September 23, 2014

பர்கரில் என்ன இருக்கிறது?டாக்டர் கிருத்திகா ரவீந்திரன்

அமெரிக்காவில் அதிக அளவு விற்பனையாகும் உணவுகளில் பர்கர் குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக இந்தியாவிலும் அதன் மீதான ஆர்வம் அதிக ரித்து வருகிறது. ஜங் ஃபுட் வகைகளின் கீழ்தான் வருகிறது பர்கர். அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்டு, நிறைய கொழுப்பு, சர்க்கரை, உப்பு, சுவையூக்கிகள், செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்பட்ட உணவுகளே ஜங் ஃபுட். இந்த உணவுகளில் ஊட்டச்சத்து களையும் நார்ச்சத்தையும் தேடினா லும் கிடைக்காது. ஆனாலும், பர்கரை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்? ஃபாஸ்ட் ஃபுட் பர்கரின் சுவை எப்படி உங்களை அடிமையாக்குகிறது? எவ்வாறு உங்கள் உடலுக்கு தீங்கிழைக்கிறது?

சீஸ் பர்கர் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்க என்ன செய்யப்படுகிறது?


இரு பன்களுக்கு நடுவே நிறைய சீஸ், சிக்கன் அல்லது காய்கறிகள் கொண்டு செய்யப்பட்ட கட்லெட் துண்டு வைக்கப்படுகிறது. அதிக கொழுப்பு, அதிக உப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளையும் கலவையாக கொண்டிருப்பதால்தான் சீஸ் பர்கர் அதிக சுவையுடன் இருக்கிறது.
ஜங் உணவு உடலுக்கு நல்லதல்ல எனத் தெரிந்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்படி பர்கரின் சுவைக்கு அடிமையாகிறார்கள்?
ஒரு சீஸ் பர்கரானது சாப்பிட்டவுடன் வேகப்பந்து போல சென்று மூளையைத் தாக்குகிறது.

பர்கரில் உள்ள கொழுப்புச் சத்து நிறைந்த இறைச்சித் துண்டை கடித்தவுடன், மூளை டோபமைனை சுரக்கச் செய்கிறது. இது கோகைன் எனும் போதை மருந்து எடுத்துக் கொள்ளும் போது மூளையில் நடக்கும் செயலுக்கு சமமானது! பர்கரில் உள்ள வெள்ளை பன் அதிக சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுவதால் மூளையில் செரடோனின் என்னும் திரவத்தை சுரக்கச் செய்கிறது. இது எக்ஸ்டசி என்னும் போதை மருந்தை உட்கொள்ளுவதால் ஏற்படும் உணர்வுக்குச் சமமானது.

இதன் விளைவாகவே அதிகச் சுவையும் போதை யும் உருவாக்கும் பர்கர் சாப்பிடுவதை யாராலும் எளிதில் விட முடிவதில்லை.
சமச்சீர் உணவில் 500 கலோரிகள் இருந்தால் போதுமானது. ஒரு பர்கரில் மட்டுமே 500 கலோரிகள், 22 கிராம் கொழுப்பு மற்றும் 1,200 மில்லிகி ராம் சோடியம் இருக்கிறது. பர்கருடன் எடுத்துக்கொள்ளும் சாஸ் வகைகள், நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்களையும் சேர்த்தால், இந்த அளவு பல மடங்கு அதிகமாகும். பர்கரில் அத்தியாவசிய சத்துகளான வைட்ட மின், புரதம், தாது உப்புகள், நார்ச்சத்துகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.

அதுமட்டுமல்ல... பர்கரில் பயன்படுத்தப்படும் பன்னில், நீண்ட நாட்கள் கெடாம லிருக்கும்படி வேதியியல் பொருட்கள் கலக்கப்பட்ட கோதுமையே பயன்படுத்தப்
படுகிறது. இது இன்சுலின் சுரப்பை தாறுமாறாக்கி, அதிக உணவு உட்கொள்ளவும் தூண்டும். இதனாலேயே பலருக்கு இடுப்புப் பருமன் அதிகரிக்கிறது.
இன்சுலினை சில நேரம் அதிகமாகவும் சில நேரம் மிகக்குறைவாகவும் சுரக்கச் செய்து, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகப்படுத்தி நீரிழிவுக் குறைபாடு ஏற்படுவதற்கும் வழிசெய்கிறது.

சீரற்ற இன்சுலின் சுரப்பும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் இணையும்போது, உடற்திறன் குறைபாடு, அதிக சோர்வு, வேலையில்
கவனம் செலுத்த முடியாமை, ஹார்மோன் சுரப்பு சீரற்றுப் போவது மற்றும் பெண்களுக்கு கருப்பை கட்டிகள் வருவதற்கும் காரணமாகிறது.
எல்லா விரைவு உணவு வகைகளிலும் கரையாத கொழுப்பு அமிலங்கள் (Transfatty Acids) இருக்கின்றன என Obesity என்ற ஆய்வு இதழ் கூறுகிறது. குறிப்பாக, பர்கரில் அதிக சுவைக்காக கரையாத கொழுப்பு முக்கிய மூலக்கூறாகச் சேர்க்கப்படுகிறது. இந்தக் கொழுப்புதான் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்தி, பருமன், இரண்டாம் வகை நீரிழிவு, இதயநாள நோய்கள், மூளைத்தாக்கு நோய் போன்றவை வரக் காரணமாகின்றன.

ஜங் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நார்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு, குடலில் கிருமிகளை அழிக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறைந்து, கிருமிகளின் அளவு அதிகமாகி வயிற்றுப்போக்குக்கும் வழி வகுக்கும். இது தொடர்ந்தால் குடல் புற்றுநோய் வரும் அபாயமும் உண்டு.
பர்கரில் பயன்படுத்தப்படும் சீஸ் பதப்படுத்தப்பட்டு, சுவையூக்கிகள் சேர்க்கப்பட்டு, இயற்கைத் தன்மையை இழந்து விடுகிறது.

பர்கரில் பயன்படுத்தப்படும் இறைச்சியும் பல நாட்கள் குளிர் அறைகளில் வைக்கப்பட்டு, கெடாமல் இருப்பதற்கான பிரிசர்வேட்டிவ் பொருட்கள் மற்றும் சுவைக்கான கொழுப்புகள் சேர்க் கப்பட்டுதான் வருகிறது. இதனால் எடை அதிகமாதல், நீரிழிவு, ரத்த அழுத்த நோய் போன்றவை எளிதில் வர அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி, கால்சியம், கொழுப்பு ஆகியவையும் கூடுதலாகி, ரத்த நாளங்களில் தடை உருவாகி, மாரடைப்பு மற்றும் மூளைத் தாக்கு நோய் (Stroke) வருவதற்கும் காரணமாகி விடும்.

அல்சீமர் (Alzheimer’s disease) எனப்படும் மறதி நோய் வருவதற்கும் பர்கர் போன்ற கொழுப்பு உணவுகளே காரணம். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை உண்டு, எளிமையான - ஆனால், வலிமையான சத்துகள் நிறைந்த உடலைப் பெற்றால் நாள் முழுவதும் சோர்வில்லாமல் உங்கள் நாளினை இனிமையாக்கலாம்!

ஆரோக்கியமான பர்கர் சாப்பிட விரும்புகிறீர்களா?

வெள்ளை பன்னுக்குப் பதில் தானியங்கள் மற்றும் உலர் விதைகள் கொண்டு செய்யப்படும் பன்களை பயன்படுத்தலாம்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சீஸ் பயன்படுத்துங்கள்.

இறைச்சித் துண்டுகளை குறைவான எண்ணெயில் கொழுப்பின்றி சமைக்கப் பழகுங்கள்.

இறைச்சிக்கு மாற்றாக பழங்கள், காய்கறிகள், உலர் பருப்புகள், முட்டை கொண்டும் பர்கரை நிரப்பலாம்.

மயோனீஸ் போன்ற சாஸ்களை வீட்டில் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

Friday, September 19, 2014

அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை


இந்திய ரூபாய் வீழ்ச்சி பற்றி கவலைப்படும்
அனைவருக்கும் ஒரு ஆலோசனை ..

இந்திய நாடு முழுவதும் ஏழு நாட்களுக்கு அவசர
தேவை தவிர கார்கள், பைக்கள் பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்துங்கள் (வெறும் 7 நாட்கள் மட்டும் ) நிச்சயமாக டாலர் வீதம் கீழே வரும். இது உண்மை தான். டாலரின் மதிப்பு பெட்ரோலால் நிர்ணயம் செய்ய படுகிறது.
அமெரிக்கா 70 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில்
டாலரை மதிப்பிடுவதை நிறுத்தி விட்டது.
அமெரிக்கர்கள் டாலர்கள் மூலம் பெட்ரோல் விற்க மத்திய
கிழக்கு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

அமெரிக்கர்கள் தங்கத்திற்கும் பெட்ரோலுக்கும்
இடையேயான பொருளாதார தொடர்பை நன்கு புரிந்துகொண்டனர். எனவே மத்திய கிழக்கு நாடுகளுடன் டாலரை பயன்படுத்தி பெட்ரோல் விற்பனை செய்யவேண்டும் என்ற ஒப்பந்தத்தை உருவாக்கி கொண்டனர்.

இதன்படி மத்திய கிழக்கு நாடுகளின் அரச குடும்பத்திற்கு அமெரிக்க பாதுகாப்பு அளிக்கும்.மத்திய கிழக்கு நாடுகளின்
வளர்ச்சிக்கு அமெரிக்க உதவும்... எனவே பெட்ரோல்
மட்டுமே அமெரிக்க டாலரின் மதிப்பை முடிவு செய்கிறது.

அமெரிக்க டாலரில் Dollar as legal tender for debts என்ற
வரிகள் உள்ளது இதன் பொருள் ... சட்ட பூர்வமான கடன்
வழங்கப்பட்டுள்ளது. அனால் நமது இந்திய பணத்தில் I
promise to pay the bearer என்ற வரி உள்ளது இதன் பொருள்
இந்திய பணம் வேண்டாம் என்றால் அதற்க்கு நிகரான
தங்கத்தை RBI வழங்கும்...

ஆனால் அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த
பொருளும் வழங்காது.. ..
At 2008 August month 1 US $ = INR Rs 39.40
At 2014 August now 1 $ = INR Rs 61
அமெரிக்க வளர்கிறதா...?
இல்லை இந்தியா கீழ்நோக்கி செல்கிறது.....காரணம்.....
அந்நிய முதலிடு... மற்றும் பெட்ரோல் இறக்குமதி..

இந்தியா

பெட்ரோல் இறக்குமதி செய்ய இந்தியா டாலரை நம்பி உள்ளது . இந்தியாவிடம் டாலர் கையிருப்பு குறையும் போது அமெரிக்காவிடம் தங்கத்தை கொடுத்து டாலர் வாங்குகிறது.... பின்பு டாலரை கொண்டு பெட்ரோல் வாங்குகிறது.

நம்மிடம் தங்கம் கையிருப்பு குறையும்
போது பணத்தின் மதிப்பு குறைகிறது.. # petrol
நமது நாடு முன்னேற நாம் தான் செயல்பட வேண்டும்.
முடிந்த அளவு பெட்ரோல், டீஸல் , காஸ்
பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவோம்..

Thursday, September 18, 2014

நான் தியாகியல்ல... தமிழ் துரோகியுமல்ல - விஜய் பேச்சு


நான் தியாகியான்னு தெரியாது... ஆனா துரோகியில்லை என்று கத்தி பட விழாவில் பேசினார் நடிகர் விஜய். கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பெரும் எதிர்ப்பு மற்றும் கடும் கெடுபிடிகளுக்கிடையில் நேற்று சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே ஏதோ ஒரு அவஸ்தையில் இருப்பவர்களைப் போலவே காட்சி அளிக்க, விஜய் மட்டும் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்தார்.


வதந்திக்கு விளக்கம்

விழாவில் அவர் பேசுகையில், "உண்மைக்கு விளக்கம் கொடுத்தா அது இன்னும் தெளிவாக விளங்கும். ஆனால் வதந்திக்கு விளக்கம் கொடுத்தா அது உண்மையாகிடும்.

நான் தியாகியா என்னன்னு தெரியாது. ஆனா தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நான் துரோகி இல்லை. எந்த ஒரு மக்களுக்கும் ஆதரவாகவோ, இல்ல எதிராகவோ இந்தப் படத்தை எடுக்கல.. அது மட்டும் நிச்சயம்.

ஒரு படத்தில் ஒரு வசனம் உண்டு, ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருக்கும் பிறகு போக போக அதுவே பழகிவிடும்," என்றார்.

இந்த விழாவில் கத்தி படத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நேரடியாக எதையும் பேசவில்லை விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, September 12, 2014

வானவராயன் வல்லவராயன் திரை விமர்சனம்''கழுகு'' கிருஷ்ணா நடித்து வெளிவந்திருக்கும் பக்கா கமர்ஷியல் படம், அண்ணன், தம்பி பாச, நேச சென்டிமெண்ட்டை வலியுறுத்தும் இந்த காலத்து 'ஆண்பாவம்' - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ''வானவராயன் வல்லவராயன்'' படம் பற்றி...

வானவராயன் - கிருஷ்ணாவும், வல்லவராயன் - மா.கா.பா.ஆனந்தும் ஆ...ஊ..என்றால் அடித்துக் கொள்ளும் அண்ணன் தம்பிகள்...ஆனாலும் அவர்களை அடிக்க யாராவது வந்தால் இருவரும் எதிராளிகளை உண்டு, இல்லை...என செய்துவிடும் உயிருக்கு உயிரான உடன்பிறப்புகள். இப்படிப்பட்ட இருவருக்குமிடையே வானவராயன் கிருஷ்ணாவின் காதலியாக மோனல் கஜார் மூக்கை நுழைக்கிறார்.

காதலி அஞ்சலியான மோனலை நள்ளிரவு 12 மணிக்கு சந்திக்கப் போன கிருஷ்ணாவை, மோனலின் அண்ணன் எஸ்.பி.சரண் தலைமையில் ஊரே ஒன்று திரண்டு அடித்து, உதைத்து அனுப்ப, இதில் ஆவேசமாகும் தம்பி மா.கா.ப.ஆனந்த், பதிலுக்கு புல்மப்பில் ஆட்களை திரட்டிக் கொண்டு போய் மோனலின் அப்பா ஜெயப்பிரகாஷின் வேட்டியை உருவி அடித்து உதைத்து விட்டு வருகிறார். இதனால் பணால் ஆகும் கிருஷ்ணா-மோனலின் காதல் மீண்டும் கை கூடியதா? இல்லையா? பொறுப்பில்லாத வானவராயன் வல்லவராயன் பிரதர்ஸ் பொறுப்பானவர்கள் ஆனார்களா? இல்லையா? என்பதை காதலும், காமெடியும் கலந்து கலர்ஃபுல்லாக சொல்லியிருக்கின்றனர்.

வானவராயனாக கிருஷ்ணா, ஃபுல்லாக குடிப்பதும், பொண்ணு கிடைக்கலையே என ஏங்குவதுமாக வழக்கம் போலவே பிய்த்து பெடலெடுத்திருக்கிறார்.

வல்லவராயனாக மா.கா.ப.ஆனந்த் புதுமுகம் என்பது தெரியாத அளவிற்கு, கிருஷ்ணாவுக்கு ஈடுகொடுத்து போஷாக்காக நடித்திருக்கிறார்.

கதாநாயகி மோனல் கஜார், அஞ்சலி கதாபாத்திரத்தில், கிளாமருக்கும் ஒத்துவரும் ஹோம்லி குத்துவிளக்காக மிளிர்ந்திருக்கிறார்.

அமெரிக்க மாப்பிள்ளையாக சந்தானம் கெஸ்ட் ரோலில் வந்தாலும் பெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். க்ளைமாக்ஸில் கல்யாண மண்டபத்திலும், மருத்துவமனையிலும் அவர் பண்ணும் அலப்பறையில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.

ராயர் பிரதர்ஸின் அப்பாவாக தம்பி ராமையா, பாட்டி செளகார் ஜானகி, அம்மா கோவை சரளா, மோனலின் அப்பா ஜெயபிரகாஷ், அம்மா மீரா கிருஷ்ணன், அண்ணன் எஸ்.பி.சரண், குடிகார சித்தாப்பாவாக வரும் 'மேனேஜர்' கிருஷ்ணமூர்த்தி, பிரியா, பாவா லட்சுமணன் உள்ளிட்ட எல்லோரும் பளிச் தேர்வு, பலே நடிப்பு. அதிலும் தம்பி ராமையா காமெடியாகவும், கண்ணீர் வரவழைக்கும் படியும் ரசிகர்களை உருக்கி எடுத்து விடுகிறார்.

ஆறு பாடல்களிலும் பாடலாசிரியர் சினேகனின் சிலேடை வரிகள், யுவன்சங்கர் ராஜாவின் இனிய இசை, பழனிகுமாரின் பளிச் ஒளிப்பதிவு, ராஜமோகனின் எழுத்து,இயக்கம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், ஆர்.பாண்டியராஜனின் பழைய 'ஆண்பாவம்' வாடை ஆங்காங்கே அடித்தாலும், ரொம்ப நாளைக்கு அப்புறம் கொங்கு தமிழில், பொள்ளாச்சி பேக்-ரவுண்டில் ''வானவராயன் வல்லவராயன் - வசூல் ராயன்!!''