Saturday, February 23, 2013

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்



இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.

தல வரலாறு

ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான்.ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு ராம ஈஸ்வரம் என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

கோயில் அமைப்பு

தென்னிந்திய கோயில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.