Sunday, March 3, 2013

நோக்கியா லூமியா 820மைக்ரோசாப்ட், விண்டோஸ் போன் 8 அறிமுகம் செய்த பின்னர், பல நிறுவனங்கள் அதன் அடிப்படையில் புதிய தலைமுறை மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க முன்வந்தன. ஏற்கனவே இயங்கி வந்த பழைய சிஸ்டங்கள் கொண்ட மொபைல் போன்களை, விண்டோஸ் போன் 8க்கு அப்கிரேட் செய்திட முடியாது என்ற தகவலுடன், முற்றிலும் புதிய இயக்கத்தினைத்தர சில நிறுவனங்கள் முன்வந்தன. அவற்றில் முன்னணி நிறுவனங் களான நோக்கியா, சாம்சங், எச்.டி.சி. மற்றும் ஹுவேய் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இந்த குழுவில் நோக்கியா தாமதமாகவே சேர்ந்து கொண்டாலும், தன் திறனை நோக்கியா அழுத்தமாகப் பதித்தது. இதன் தயாரிப்பான நோக்கியா லூமியா 920, நோக்கியா நிறுவனத்திற்கே புதுமையான ஒரு போனாக இருந்தது. ஸ்மார்ட் போன் சந்தையில் தனக்கென ஓர் இடம் பிடித்தது. எல்லாருக்கும் லூமியா 920ன் திறன் தேவைப்படாது என அறிவித்த நோக்கியா, பெரும்பான்மையான மக்கள் விரும்பும் ஸ்மார்ட் போனாக லூமியா 820 ஐக் கொண்டு வந்துள்ளது. தொடக்க நிலையில் உள்ள லூமியா 620க்கும், உயர் ரக பியூர்வியூ 920க்கும் இடையே மத்திய நிலையில் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
லூமியா 920 போல, இதிலும் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் டூயல் கோர் எஸ் 4 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஒரு ஜிபி அளவில் ராம் மெமரி, 8 ஜிபி ஸ்டோரேஜ் வசதி, 64 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, எளிதில் கழற்றிடும் வசதி கொண்ட பேட்டரி, மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் இதன் பிற சிறப்புகள். நோக்கியாவின் புகழ் பெற்ற கிளியர் பிளாக் தொழில் நுட்பம் கொண்ட 4.3 அங்குல அகல AMOLED வண்ணத்திரை, கார்ல் ஸெய்ஸ் லென்ஸ் இணைந்த 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா மற்றும் முன்புறமாக வீடியோ அழைப்பிற்கான விஜிஏ கேமரா என இரண்டு கேமராக்கள் தரப்பட்டுள்ளன. 1089 பி வேக ஹை டெபனிஷன் வீடியோ பதிவு கிடைக்கிறது. டூயல் எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. சில விநாடி வீடியோவினை இமேஜாக மாற்றும் சினிமா கிராப் லென்ஸ், அகன்ற விரி காட்சிகளை எடுக்க பனோரமா லென்ஸ், குழுவினரை போட்டோ எடுக்க ஸ்மார்ட் ஷூட் லென்ஸ் என பலவிதமான லென்ஸ் தொழில் நுட்ப வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன. A2DP இணைந்த புளுடூத் 3.1 செயல்படுகிறது. இதனைப் பயன்படுத்துவோருக்கு ஸ்கை ட்ரைவ் தளத்தில் 7 ஜிபி வரை டேட்டா ஸ்டோரேஜ் வசதி இலவசமாகத் தரப்படுகிறது
இந்த போனின் பரிமாணம் 123.8x68.5x9.9. மிமீ. எடை 160 கிராம். நான்கு பேண்ட் அலை வரிசை செயல்பாடு, வை-பி, புளுடூத் 3 மற்றும் என்.எப்.சி. தொழில் நுட்பம், ஜி.பி.எஸ்., மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், மைக்ரோ சிம் பயன்பாடு, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை இதன் மற்ற அம்சங்களாகும். இந்த போனில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 1650 mAh திறன் கொண்டதாக உள்ளது. 360 மணி நேரம் இதில் மின்சக்தி தங்குகிறது. 15.4 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். வயர்லெஸ் வழி சார்ஜ் செய்திட தனியே சார்ஜரை வாங்கிப் பயன்படுத்தலாம். போனின் வண்ணத்தை மாற்றிப் பார்க்கும் வகையில், மூடிகளை மாற்றிக் கொள்ளலாம். இந்தியாவில் இதன் அதிக பட்ச அறிவிக்கப்பட்ட விலை ரூ.24,799. ஆனால், சில்லரை விற்பனை கடைகள், ஆன்லைன் விற்பனை தளங்கள் ஆகியவற்றில் குறைவான விலையிலும் இந்த போன் கிடைக்கிறது.

நன்றி : www.dinamalar.com