Thursday, May 30, 2013

குட்டி புலி - திரை விமர்சனம்


மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 999வது படம். இப்படியே இன்னும் 4 படங்கள் வந்தால் போதும், இனி மதுரை பக்கம் ஒருத்தரும் எட்டிப் பார்க்க மாட்டார்கள். அந்த அளவிறகு மதுரை, மற்றும் சுற்றுப்புற ஊர்களை வன்முறை ஊர்களாக காட்டுவதே தமிழ் சினிமாவில் வழக்கமாகி விட்டது.


இந்தப் படத்தில் ஒரு வித்தியாசத்திற்கு மதுரையை அடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரை கதைக்களமாக்கியிருக்கிறார்கள். ஊர் மட்டும்தான் வேறு, மற்றபடி வழக்கமான மதுரைப் படமாகவே நமக்குத் தெரிகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் லால். இவரது தெருவைச் சேர்ந்த பெண் ஒருத்தியை பக்கத்துத் தெருவில் உள்ள ஒருவன் கிண்டல் செய்ததற்காக அவனைக் கொலை செய்கிறார். எதிர்பாராமல் எதிரிகளிடம் இவர் சிக்கிக் கொள்ள , குடும்பம் குழந்தை எல்லாவற்றையும் மறந்து தெருவுக்காக உயிர் துறக்கிறார்.

கணவன் லால் இறந்ததும், மகன் சசிகுமாரை வளர்த்து ஆளாக்குகிறார் சரண்யா. இவரும் அப்பா போல் தெருவுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் அப்பாவின் குணத்துடனே இருக்கிறார். அம்மா படும் கஷ்டத்தைப் பார்த்து திருமணமே செய்து கொள்ளக் கூடாதென இருக்கிறார்.

அதே தெருவுக்கு குடி வரும் லட்சுமி மேனனுக்கு சசிகுமாரைப் பார்த்ததும் ‘லவ்’ ஆரம்பமாகிறது. முதலில் குனிந்த தலை நிமிராமல் இருக்கும் சசிகுமாரும் போகப் போக லட்சுமி மேனனை ‘லவ்’ செய்கிறார்.

இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே மிகப் பெரிய ரவுடியான ராஜசிம்மனை அடித்து, உதைத்து பஸ் ஸ்டாண்டில் கட்டி வைத்து அவமானப்படுத்துகிறார் சசிகுமார். ராஜசிம்மன் சசிகுமாரை சமயம் பார்த்து போட்டுத் தள்ள கொலைவெறியுடனே அலைகிறார்.

கல்யாணமே வேண்டாம் என்றிருந்த மகன் சசிகுமார், திருந்தி வாழ நினைக்கும் போது, அம்மா சரண்யா மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

‘குட்டிப்புலி’ கதாபாத்திரத்திற்காக சசிகுமார் செய்த அதிகபட்ச மாற்றம் தாடி வளர்த்தது மட்டுமே. மற்றபடி அதே பேச்சு, அதே சிரிப்பு, அதே உச்சரிப்பு என எதிலும் மாற்றமில்லை. சசி ஸார், புதுசு புதுசா பல ‘புலிகள்’ சினிமாவுல புதுமைகளை புகுத்திக்கிட்டிருக்காங்க. இன்னும் எவ்வளவு நாள்தான் இதே ரூட்ல போவீங்க. சுதாரிச்சிக்குங்க…

லட்சுமி மேனன், ‘சுந்தரபாண்டியனில்’ பார்த்ததை விட இதில் இன்னும் சுந்தரமாக இருக்கிறார். ஆனால், இவரைக் கூட நடிக்க விடவில்லை இயக்குனர், நடக்கத்தான் விட்டிருக்கிறார். தெருவைப் பற்றிய கதை என்பதால் இவரும் சசிகுமாரும், தெருவில் நடந்து கொண்டேதான் காதலிக்கிறார்கள்.

வழக்கம் போல் அம்மாவாக சரண்யா. தேசிய விருது பெற்றவர், சொல்ல வேண்டுமா. இந்த படத்திலும் அசத்தியிருக்கிறார்.

சசிகுமார் நண்பனாக ‘ஆடுகளம்’ முருகதாஸ். ஹீரோ கூட ஒரு நண்பன் இருக்க வேண்டும் என்பதற்காக இவரது கதாபாத்திரம்.

நகைச்சுவைக்கென ‘படித்த நண்பர்களின்’ கூட்டணி. தெரு முக்கில் உட்கார்ந்து கொண்டு வெட்டிக் கதை பேசும் 5 படித்தவர்கள்தான் படத்திற்கு நகைச்சுவை காரணகர்த்தாக்கள். அதற்குத் தலைமை பாலா. ஆனால் சிரிப்பு மட்டும் வருவேனா என்கிறது.

ஒரு முழு இளையராஜா பாடலை (கழுகு – பொன்னோவியம்…) சசிகுமார், லட்சுமி மேனன் காதலுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் ஜிப்ரானின் இசை எப்படியிருந்தது என்று.

படத்தில் கதை என்று எதுவுமில்லை, கவரும் விதத்தில் காட்சிகள் இல்லை, இனிமையான பாடல்கள் இல்லை, இப்படி பல இல்லைகளை சொல்லலாம்.

சசியிடம் என்ன சொல்லி இந்த படத்திற்கான சம்மதத்தைப் பெற்றாரோ இயக்குனர் முத்தையா….

‘குட்டிப்புலி’ – அரை அடியாவது பாய்ந்திருக்கலாம்.

Kutti Puli Movie Stills