Friday, May 31, 2013

சோனியாவுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை


புது டெல்லி, ஜூன். 1 - தமக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்துள்ளார். 

ஜப்பான் மற்றம் தாய்லாந்து சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லி திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றிருப்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே அது பற்றி கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. எப்போதுமே அரசியலையும், விளையாட்டையும் ஒன்றாக்கக் கூடாது என்றார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறுவது பொய்யானது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடு இல்லை. அனைத்து பிரச்சனைகளும் நாங்கள் இணைந்தே ஆலோசித்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.

ஆனால் நிலக்கரி ஊழல் விவகாரத்தில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்ட போது சோனியா காந்தி என்ன மாதிரியான கருத்தை வெளிப்படுத்தினார் என்ற கேள்விக்கு மன்மோகன்சிங் பதில் அளிக்கவில்லை. இதேபோல் மக்களவைத் தேர்தலில் வென்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தால் இடது சாரிகளும், மம்தாவும் கூட்டணியில் இடம் பெறுவார்களா என்ற கேள்விக்கு அரசியலில் நிரந்தர கூட்டணி என்பது எதுவும் இல்லை. அதேப்போல நிரந்தர எதிரி என்று யாரும் இல்லை என்றார். மேலும் இந்திய பொருளாதார நிலவரம் குறித்து கருத்து தெரிவிக்க்கையில் இந்தியாவின் பண வீக்கம் நிச்சயம் குறைவதை பார்க்கத் தான் போகிறோம். அதேப் போல பொருளாதாரமும் நிச்சயம் வளர்ச்சியை அடையும் என்றார் மன்மோகன்சிங்.