Friday, July 5, 2013

சிங்கம் 2 திரை விமர்சனம்படத்தின் கதை என்ன அப்படியே சிங்கம் முதல் பாகத்தின் தொடர்ச்சி தான். துரைசிங்கம் போலீஸ் வேலையை விட்டு தூத்துக்குடிக்கு வருவார் இல்லையா. அப்படி வந்தவர் ஒரு பள்ளியில் என்சிசி ஆபீசராக வேலைக்கு சேர்கிறார்.

அப்படி இருந்தவாறே தூத்துக்குடியில் நடக்கும் கடத்தல்களை கண்காணிக்கிறார். யார் யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என லிஸ்ட் எடுக்கிறார். போலீஸ் வேலையை விட்டதால் கோவமான அப்பா ராதாரவி சூர்யா அனுஷ்கா திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.

சூர்யா வேலை பார்க்கும் பள்ளியில் ஹன்சிகா படிக்கிறார் (இந்தக் கொடுமையை எங்கப் போய் சொல்றது). பள்ளியில் வந்து சண்டை போடும் ரவுடியை போட்டு சூர்யா பொளப்பதை பார்க்கும் ஹன்சிகாவுக்கு சூர்யா மேல் காதல் வந்து விடுகிறது.

ஒரு கட்டத்தில் டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார். ஹன்சிகாவின் சித்தப்பா ரகுமான். அவரின் அடுத்த நிலை குட்டி டானாக முகேஷ் ரிஷி (நம்ம வாசிம்கான் தான்). அவரின் கையாள் சகாயமாக நான் கடவுள் வில்லன் ராஜேந்திரன். இவர்களுக்கு பிரவுன் சுகர் சப்ளை பண்ணும் இன்டர்நேசனல் டான் டேனி.

இவர்களை எதிர்த்து சிங்கம் ஆடும் ஆட்டமே இந்த இரண்டாம் பாகம். இதிலும் கடைசி வரை அனுஷ்காவை திருமணம் செய்யவில்லை. அப்படினா மூன்றாம் பாகம் கூட வர சாத்தியக்கூறுகள் இருக்கு. (நம்ம கெரகம் அப்படி இருந்தா என்ன பண்ண முடியும்)

சூர்யா வழக்கம் போலவே முழு உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். முதல் ஒரு மணிநேரம் சந்தானத்துடன் காமெடியில் சேர்ந்து கலக்குகிறார். தூத்துக்குடியின் டிஎஸ்பியாக பொறுப்பேற்றதும் பரபரப்பாகும் அவர் நம்மையும் கக்கத்தில் வைத்துக் கொண்டு வில்லன்களை வேட்டையாடுகிறார்.

அனுஷ்காவை விட ஹன்சிகாவுக்கு அதிக நேரம் வரும் வாய்ப்பு. பள்ளி மாணவி என்னும் போதுதான் சற்று ஜெர்க்காகிறது. இவ்வளவு மொழு மொழு பள்ளி மாணவியை நான் பார்த்ததே இல்லை. ஒரு தலையாக காதலித்து பிறகு சூர்யாவுக்கு உதவும் கதாபாத்திரம் ஹன்சிகாவுக்கு.

அனுஷ்கா தான் ஜோடி. இரண்டு பாடல்களுக்கு சேர்ந்து நடனமாடுகிறார். சில காட்சிகள் வருகிறார். அவ்வளவு தான். சற்று முத்தி போன மாதிரி தெரிகிறார். பல இடங்களில் சூர்யாவின் உயரத்திற்கு ஈடுகொடுத்து குனிந்து குனிந்து ஆடுகிறார்.

படத்தின் முதல் ஒரு மணிநேரத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு அதன் பிறகு பரபரப்பான காட்சிகளின் இறுக்கத்தை குறைக்கும் வேலையையும் செவ்வனே செய்கிறார். சந்தானம் தான் படத்தின் கலகலப்புக்கு ஆதாரம்.

முகேஷ் ரிஷியை பித்தளை குழாய் மூக்கன் என்று கலாய்க்கும் போது தியேட்டர் குலுங்கி சிரிக்கிறது. தப்பு செய்து விட்டு மன்னிப்புக் கேட்கும் ஒவ்வொரு முறையும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே என்று மண்டியிட்டு பேண்ட்டை கழட்டும் போது தியேட்டர் அதிர்கிறது.

கடைசியில் கிரேன் மனோகரைப் பார்த்து டபுள் மீனிங்கில் கப்பல் தரை தட்டிருச்சி என்று கலாய்க்கும் போது அர்த்தம் புரிந்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். அறிமுகமாகும் காட்சியில் எந்திரன் ரஜினியையும் இடைவேளைக்கு பிறகு விஸ்வரூபம் கமலையும் இமிட்டேட் செய்து கலாய்க்கிறார்.

முதல் பாகத்தின் கன்டினியுட்டிக்காக விவேக் இந்த படத்திலும் இருக்கிறார். சில காட்சிகளில் அவரும் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் முயற்சிக்கிறார். நமக்குத் தான் வரவில்லை.

வில்லன்கள் போடும் திட்டமும் அதனை அறிந்து சாமர்த்தியமாக எதிர் திட்டம் தீட்டி சூர்யா சமாளிப்பதும் தான் படத்தின் விறுவிறுப்புக்கு மூலகாரணம். பெண்ணை கடத்தும் காட்சியில் அதனை சரியாக திட்டமிட்டு சரிப்படுத்தும் காட்சியில் துவங்கும் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாமல் இறுதி வரை செல்கிறது. அது தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகிறது.