Wednesday, July 10, 2013

பரபரப்பை ஏற்படுத்திய இளவரசனின் கடைசி கடிதம்



இளவரசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தன் பெற்றோர், திவ்யா, அண்ணன் பாலாஜி ஆகியோருக்கு எழுதிய, நான்கு பக்க கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "அடுத்த ஜென்மத்தில், ஒரே ஜாதியில் பிறந்து திருமணம் செய்து கொள்ள ஆசை' என, அதில், குறிப்பிட்டுள்ளார்.


தற்கொலைக்கு முன், இளவரசன் எழுதிய நான்கு பக்க கடிதத்தை, போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தை எடுத்தது யார் என்ற சர்ச்சை, ஒரு பக்கம் இருக்க, இளவரசன் கடைசி கடிதமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், திவ்யாவுக்கு உருக்கமாக எழுதியுள்ளார்.


அதில் எழுதப்பட்டுள்ளதாவது: என் அன்பு காதலி திவ்யாவுக்கு, நீ என்னுடன் இருந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. நீ என்னை விட்டு பிரிந்த நாளில் இருந்து, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் எனக்கு, உன்னை ரொம்ப பிடிக்கும். ஜூலை, 1ம் தேதி, நீ மீண்டும் வருவாய், நாம் சேர்ந்து வாழ்வோம் என, நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஒரு வேளை நீ என்னுடன் வரவில்லை என்றால், கண்டிப்பாக நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன். நீ ஏற்கனவே, உன் அப்பா இறந்ததற்கு காரணம், நீ தான் என்று நினைத்து கஷ்டப்படுகிறாய். நீ அடிக்கடி என்னிடம் சொல்வாய், என் அப்பா உண்மையாகவே என் மீது பாசம் வைத்திருந்தால், என் மீது கொலை பழியை போட்டு விட்டு, என் வாழ்க்கையை இப்படி செய்திருக்க மாட்டார்.

வாழ முடியவில்லை:

அது போலவே, நீ என்னிடம் கேட்பாய் என்பது எனக்கு தெரியும். ஆனால், உண்மையாகவே என்னால், உன்னை விட்டு வாழ முடியவில்லை. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன். என் கூட ஏன் வாழ வரமாட்டேங்கிற, கண்டிப்பா எனக்கு தெரியல. நாம இரண்டு பேரும், எவ்வளவு கஷ்டத்துக்கு மேல ஒன்று சேர்ந்தோம்னு உனக்கு நல்லா தெரியும். எனக்கு ரெம்ப ஆசை திவ்யா, நாம இரண்டு பேரும் நல்லா வாழ வேண்டும்னு. நம்மள கேவலமா பார்த்தவங்க முன்னாடி, பொறமைப்படும் அளவுக்கு உன்ன அழகா கண் கலங்காம வச்சுக்கனும்னு எனக்கு ரெம்ப ஆசை. உனக்கு ஒன்று தெரியுமா, நீ என்னோட எல்லா விஷயங்களிலும் சேர்ந்திருக்க. ஆனா, இப்போ எதிலும் எங்கூட இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்குடா. ப்ளீஸ் திவ்யா என்ன வெறுக்காத... எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். தயவு செய்து என்னை மன்னித்து விடு. நீ என்னிடம் கேட்கலாம்; உண்மையாகவே நீ என் மேல் பாசம் வைத்தவனாக இருந்தால், ஏன் நீ என்னை விட்டு போகனும்னு... கண்டிப்பா சொல்றேன் நான் உன்ன விட்டு போகனும்னு நெனக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து வாழனும்னு ரொம்ப ஆசை. ஆனால், என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா. என்னை மன்னிச்சுடு. நான் இந்த உலகத்தை விட்டு போறேன். இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும், நானும், ஒரே ஜாதியில் பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா. ஐ லவ்யூ சோ மச் பேபி... ஐ லவ் சோ மச்...! இவ்வாறு, எழுதப்பட்டுள்ளது.

குழந்தையாக பிறக்க வேண்டும்:

தந்தைக்கு எழுதிய கடிதத்தில் உள்ளதாவது: என் பாசத்துக்குரிய அப்பாவிற்கு, என்னை மன்னிச்சுடுங்க அப்பா. அம்மாவையும், பாலாஜி, அக்கா எல்லோரையும் பார்த்துகோங்க, தயவு செஞ்சி அம்மாவை கஷ்டப்படுத்தாதீங்கப்பா. என் நேசமிகு அம்மாவுக்கு, அம்மா என்னை மன்னிச்சுடு; உன்னை நல்லா வச்சு பார்க்கனும்னு ஆசை. நீயும், அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க என்னை வளர்த்து படிக்க வைக்க. ஆனால், என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தா, நீயும் அப்பாவும் எனக்கு குழந்தையா பிறக்கணும். இந்த ஜென்மத்துல பட்ட கடனை நான் உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் தீர்க்கணும்.


இறப்புக்கு யாரும் காரணம் இல்லை:

என்னோட பெஸ்ட் பிரண்ட் என் அண்ணன் பாலாஜிக்கு... என்னை மன்னிச்சுடு பாலா... நீ எனக்கு எவ்வளவோ சொன்ன, தப்பான முடிவு எடுக்காதன்னு. ஆனால், என்னால முடியல பாலா. "ஐ யாம் ரியலி ஷோ சாரி' பாலா. என்னோட இறப்புக்கு யாரும் காரணமில்லை. இது, என் சுயமான முடிவாகும். என்னுடைய கடைசி ஆசை. நான் இறந்த பின், என்னை பார்க்க திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது; அப்படி ஒரு வேளை திவ்யா வந்தால், யாரும் அவளை திட்ட வேண்டாம்; அவளை அனுமதிக்க வேண்டும். ப்ளீஸ், அவளை யாரும் கோபமாக பேச வேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். என்னால் அவ கஷ்டப்படறது எனக்கு பிடிக்கல, அவளாவது வாழ்க்கைல சந்தோஷமா இருக்கட்டும். இவ்வாறு, எழுதப்பட்டுள்ளது.

ஜூலை 1ல் எழுதப்பட்ட கடிதம்:

இந்த கடிதம் ஜூலை, 1ம் தேதி முதல், எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது. கடிதத்தின் இறுதியில் கையெழுத்து இல்லாமல் உள்ளது. இந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து இளவரசனுக்குரியதா என்பது குறித்து, போலீசார் இளவரசனின் பெற்றோரிடம் காட்டி உறுதி செய்துள்ளனர். அதே நேரம், இளவரசனின் தந்தை பத்திரிகை நிருபர்களிடம், "அது இளவரசன் கையெழுத்து இல்லை' என, கூறியுள்ளார். போலீசார் இந்த கடிதத்தை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இளவரசன் எழுதிய இந்த கடிதத்தை மர்ம நபர் எடுத்து சென்றுள்ளார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றுவதற்கு முன், ஜெராக்ஸ் போட்டு வைத்திருந்ததாகவும், அதன் நகல்கள் பத்திரிகை நிருபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்த கடிதம் வெளியாகி இருப்பது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, இந்த கடிதம் குறித்து, போலீசாரிடம் உறுதி செய்ய முயன்ற போது, எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்ததோடு, அந்த கடிதத்தை நாங்கள் வெளியிடவில்லை என, கூறினர்.

சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிக்கை:

"இளவரசன் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள், சாட்சியங்கள், சந்தேகங்கள் உள்ளதால், வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என, உள்துறை செயலருக்கு, இளங்கோ, மனு அனுப்பி உள்ளார்.

அவரது மனுவில், கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி, மர்ம முறையில் இறந்த, என் மகன், இளவரசனின் மரணம் படுகொலையாக இருப்பதற்கான ஆதரங்களும், சாட்சியங்களும் இருப்பதாக தெரிவித்திருந்தேன். இளவரசனுக்கு, தற்கொலை செய்யும் மனநிலை கிடையாது. அவர், ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு வேலைக்கு செல்லவும், படிப்பை தொடரவும் முடிவு செய்திருந்தார். சித்தூருக்கு செல்ல, தயார் படுத்திக்கொண்டிருந்தார். அதை நிரூபிக்கும் விதமாக, என் உறவினர் மகன் அறிவழகனின் சாட்சியம் உள்ளது. சித்தூருக்கு அறிவழகனையும், இளவரசன் துணைக்கு அழைத்துள்ளார். முதலில் மறுத்த அவர், பின்னர் சம்மதித்துள்ளார். அதன் பின், இளவரசன் இறந்துள்ளார். அவர் இறந்து கிடந்த இடத்துக்கு அருகே, வீடுகள் உள்ளன.

இளைஞரிடம் தகராறு:

அங்கே உள்ளவர்கள், இளவரசன் மரணம் நிகழ்ந்த நேரத்தில், மூன்று இளைஞர்கள், ஒரு இளைஞரிடம் தகராறு செய்ததாகவும், பின் ஒரு பெரிய அலறல் சத்தம் கேட்டதாகவும் சொல்கின்றனர். அதை தீவிரமாக விசாரித்தால், உண்மை வெளிப்படும். இளவரசனின் சட்டை பையில் இருந்து, எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் கடிதம், பல சந்தேகங்கள் எழுகிறது. அந்த கடிதம், யாரால் கைப்பற்றப்பட்டது. அதை வேறு நபர்கள் எடுத்த போது, யாரும் பார்க்கவில்லையா, என்ற கேள்வி எழுகிறது. அக்கடிதம், இளவரசனால் எழுதப்பட்டதா? கடிதம் எழுதப்பட்ட காலம், எழுத்து ஒன்றுக்கொன்று மாறுபட்டுள்ளது. கடிதத்தில் இளவரசனின் கைரேகைகள் பதிந்துள்ளதா என்ற கேள்வியும் உள்ளது. இளவரசனை கொலை செய்தவர்களே, வழக்கை திசை திருப்ப, கொலை செய்த பின், கடிதத்தை வைத்து சென்றனரா என்ற சந்தேகம் உள்ளது. என் மகன் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புக்களும், சந்தர்ப்ப சூழல்களும் உள்ளதால், நியாயமான விசாரணை நடக்க, இவ்வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடிதத்தை எடுத்தவர் மீது நடவடிக்கை:

இளவரசன் கடைசியாக எழுதிய கடிதத்தை எடுத்து சென்றவரை, போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர். அதே நேரம், கடிதத்தை மறைத்தவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், இதில் தொடர்புடையோர் பீதியடைந்துள்ளனர்.

இளவரசனின் இறப்பு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், 7ம் தேதி இரவு, இளவரசன் கடைசியாக எழுதிய, நான்கு பக்க கடிதத்தை, போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம் இளவரசனின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து, 4ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது; கடிதத்தை எடுத்தவர், மற்றொரு நபரிடம் கொடுத்துள்ளார். இளவரசனின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்த கடிதம் குறித்து, இளவரசனின் உறவினர்கள் மற்றும் சில அரசியல் கட்சியினருக்கும் தெரிந்துள்ளது. ஆனால், இதை போலீசாருக்கு, தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். இளவரசன் இறந்து கிடந்த அன்று, இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியிருந்தால், இளவரசன் தற்கொலை உறுதி செய்யப்பட்டிருக்கும். கடிதத்தை எடுத்தவர், இந்த வழக்கின் போக்கை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்தாரா என்ற சந்தேகம், போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. கடிதத்தை எடுத்தவர், தற்போது, போலீசாரின் கஸ்டடியில் இருப்பதாக கூறப்பட்டாலும், யார் எடுத்தார் என்ற தகவலை, போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். போலீசார், தற்போதைக்கு, இளவரசனின் இறுதி சடங்கு முடித்து, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வேண்டும். அதன் பின், கடிதம் குறித்த விசாரணையை முடுக்கி விட்டு, இதில், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க காத்திருக்கின்றனர். கடிதத்துக்கு பின், இளவரசனின் உறவினர்கள் உள்ளிட்டோர், எந்த சர்ச்சையும் கிளப்பாமல் உள்ளனர். மருத்துவமனையிலும் கூட்டம் சேருவது குறைந்துள்ளது. இந்த வழக்கில், இளவரசனின் கடிதம் மூலம், தற்கொலை உறுதி செய்யப்பட்ட போதும், தொடர்ந்து, இளவரசனின் தந்தை இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள் சிலர், இளவரசன் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி வருகின்றனர். கடிதம் எடுக்கப்பட்டது, மறைக்கப்பட்டதில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், கடிதம் எடுத்தவரின் மொபைல் போன் மூலம், யாருக்கு எல்லாம் போன் செய்யப்பட்டுள்ளது, அந்த எண்களில் இருந்து யாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை, போலீசார் சேகரித்துள்ளனர். போலீசாரின் மறைமுக நடவடிக்கை அறிந்த சிலர், தற்போதே பீதியடைந்திருப்பதோடு, இளவரசனின் இறுதிச் சடங்கிற்கு பின், அவர்கள் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது. தற்போது, மாவட்டம் முழுவதும் அமைதியாக இருந்த போதும், கிராம பகுதி முதல், நகரப் பகுதி வரை, தொடர்ந்து போலீசார், பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும், 16 செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, நேற்று முதல், வெளி மாநில, மாவட்ட வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பின், அனுமதிக்கப்படுகின்றன. குறிப்பாக, சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் யாராவது மாவட்டத்துக்குள் செல்கின்றனரா என்பது குறித்து, மாவட்ட எல்லைகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள தங்கும் விடுதி, திருமண மண்டபம் உள்ளிட்டவைகளில் தங்குவோர் குறித்த, விவரங்களையும் போலீசார், சில நாட்களாக கண்காணித்து வருகின்றனர்.

Source : Dinamalar