Monday, June 10, 2013

ரயில் பெட்டி அசுத்தமா? குழாயில் தண்ணீர் வரவில்லையா? ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் போதும்!


ரயில் பெட்டி அசுத்தமாக இருந்தாலோ, குழாயில் தண்ணீர் வரவில்லையென்றாலோ ஒரே ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். ஊழியர்கள் அங்கு வந்து சரி செய்வார்கள். இந்த புதிய திட்டத்தை ரயில்வே துறை விரைவில் தொடங்கவுள்ளது.

ரயிலில் குப்பையாக இருந்தாலோ, கழிப்பறை துர்நாற்றம் வீசினாலோ, குழாயில் தண்ணீர் வராவிட்டாலோ உடனடியாக எதுவும் செய்ய முடியாது. டிக்கெட் பரிசோதகரிடம் உள்ள புகார் புத்தகத்திலோ, ரயில் நிலையத்தில் உள்ள புகார் புத்தகத்திலோ பதிவு செய்தால், அதன்பின் அந்த குறைபாடு சரி செய்யப்படும்.

ஆனால் நாம் அந்த குறைபாடுகளை சகித்து கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும். இந்நிலையில், 2013 & 14 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், பயணிகளின் புகாரை உடனடியாக நிவர்த்தி செய்யும் புதிய முறை (ஓபிசிஆர்எஸ்) அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக 3 இலக்க எண்ணை ஒதுக்கித் தருமாறு தொலை தொடர்பு துறையிடம் ரயில்வே கேட்டுள்ளது.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓபிசிஆர்எஸ் முறையின்படி நாம் ரயிலில் பயணம் செய்யும்போது ஏதாவது சுகாதார குறைபாடு இருந்தால் நமது டிக்கெட்டில் உள்ள பிஎன்ஆர் எண்ணை குறிப்பிட்டு, குறைபாடு என்ன என்பதையும் டைப் செய்து ரயில்வே எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

புகார் பெறப்பட்டவுடன் பதில் எஸ்எம்எஸ் வரும். அதில் புகார் எண் இடம் பெற்றிருக்கும். அதுமட்டுமின்றி அந்த ரயிலில் உள்ள சுகாதார கண்காணிப்பாளரின் செல்போனுக்கும் புகார் தொடர்பான தகவல் செல்லும். புகாரை பெற்றவுடன் ரயில்வே பணியாளர்கள் வந்து அந்த குறைபாட்டை ரயில் பயணத்தின் போதே சரி செய்து கொடுப்பார்கள்.

குறைபாடு சரி செய்யப்பட்டதும், அந்த ஊழியரிடம் நமது செல்போனுக்கு வந்த புகார் எண்ணை தெரிவிக்க வேண்டும். அவர் அந்த எண்ணை குறிப்பிட்டு புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரத்தை மீண்டும் ஓபிசிஆர்எஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்புவார். புகார் தெரிவித்த பயணி புகார் எண்ணை தெரிவிக்கவில்லை என்றால், அவருக்கு திருப்தி ஏற்படும் வகையில் குறைபாடு சரிசெய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிந்துகொள்வார்கள்.

இத்திட்டம் முதல் கட்டமாக, மும்பை ராஜ்தானி அல்லது பெங்களூர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.