Saturday, June 22, 2013

மாடியிலிருந்து தவறி விழும் குழந்தையை காப்பாற்றப்படும் காட்சி


சீனாவில் ஐந்தாவது மாடி ஜன்னலில் இருந்து விழுந்த 2 வயது பெண் குழந்தையை வழிப் போக்கர்கள் தாங்கிப் பிடித்து காப்பாற்றிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சீனாவின் நிங்காய் பகுதியை சேர்ந்த பெண் தனது வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்றவேளை உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை கண் விழித்து தாயை காணாமல் அழத் தொடங்கியது.

அக்குழந்தை, ஐந்தாவது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னல் வழியே வெளியில் எட்டிப் பார்த்து பிடி நழுவியதால் ஜன்னலில் இருந்து வெளிப்பக்கம் சரிந்தது.

ஜன்னல் கதவை பிடித்தபடி ஊசலாடிய குழந்தை பயத்தில் கதறி அழுததினால், குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தில் பேசிக் கொண்டிருந்த நபர்கள் வீதியில் திரண்டனர்.

60 அடிக்கும் அதிகமான உயரத்தில் உயிருக்கு போராடிய அந்த குழந்தை சில நொடிகளில் பிடியை நழுவ விட்டு தரையை நோக்கி விழத் தொடங்கியது.

அரண் போல் சூழ்ந்து கொண்ட அப்பகுதி மக்கள் கீழே விழுந்த குழந்தையை லாவகமாக பிடித்து காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக கண்ணின் கீழ்பகுதியில் சிறிய சிராய்ப்பு காயத்துடன் குழந்தை உயிர் பிழைத்தது.

காப்பாற்றியவர்களில் ஒருவருக்கு கழுத்து பகுதியிலும், இன்னொருவருக்கு கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.