Wednesday, June 26, 2013

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி சமீப காலமாக இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு பற்றி பயப்படாதீர்கள் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ள போதிலும், அதன் பாதிப்பு தடுக்க முடியாத படிதான் உள்ளது.

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடந்த சில தினங்களாக அதிகரித்தப்படி உள்ளது. இது இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியைத் கொடுத்துள்ளது.

ஏற்கனவே இழப்பை சந்தித்து வரும் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ரூபாய் மதிப்பு சரிவும், கச்சா எண்ணை விலை உயர்வும், இழப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளன. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியம் பொருட்கள் விலையை உடனே உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்த எண்ணை நிறுவனங்கள் அனுமதி கேட்டுள்ளன. அதுபோல டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா உயர்த்துவதற்கு பதில் மேலும் அதிகமாக உயர்த்த வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

சமையல் கியாஸ் விலையும் கணிசமான அளவுக்கு உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதியில் இந்த விலை உயர்வு பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது. ஜூலை 1-ந் தேதி முதல் பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.

பெட்ரோலியம் பொருட்கள் விலை உயரும்பட்சத்தில் அது அடுத்தடுத்து அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்து விடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பயணிகள், சரக்கு போக்குவரத்து கட்டணம் உடனே உயரும்.

இதன் தொடர்ச்சியாக காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்க்ள விலை உயரும் நிலை ஏற்படும். இதனால் மின் கட்டணமும் உயர்த்தப்படலாம்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு பெட்ரோலியம் பொருட்கள் விலை உயர்வை பாதிப்பு இல்லாமல் செயல்படுத்த முடியுமா என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.