Wednesday, June 5, 2013

தந்தையின் கை, கால்களை கட்டி அடைத்து வைக்கும் "பாசக்கார' மகன்


ஐந்தாண்டுகளாக தனியறையில் அடைக்கப்பட்டிருந்த இளம் பெண் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட நிலையில், மகனால், கை, கால் கட்டப்பட்டு, வீட்டின் மேற்கூரையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முதியவரை போலீசார் நேற்று மீட்டனர்.

"நாட்டின் தகவல் தொழில்நுட்பத் தலைநகர்' என, போற்றப்படும் பெங்களூரு நகரில், மனிதாபிமானம் அறவே இல்லாத வகையில், இளம் பெண் ஒருவர், தன் பெற்றோரால், ஐந்தாண்டுகளாக, தனியறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்; அந்தப் பெண், நேற்று முன்தினம் மீட்கப்பட்டார். இந்நிலையில், அதே பெங்களூரு நகரில், தன் சொந்த மகனால், கை, கால்கள் கட்டப்பட்டு, வீட்டின் கூரையில், பல ஆண்டுகளாக கட்டி வைக்கப்படும் முதியவர் பற்றிய தகவல், போலீசாருக்கு நேற்று கிடைத்தது. தினமும் காலையில், தந்தை வசிக்கும் சிறிய வீட்டுக்கு வரும் மகன், சாப்பாடு, தண்ணீர் எடுத்து வைத்து விட்டு, அவரின் கை, கால்களை, நீண்ட சங்கிலியால் கட்டி, வீட்டின் கூரையை ஒட்டி இருக்கும், சிறிய அறையில் அடைத்து விட்டு, வேலைக்கு சென்று விடுவான். இரவில் திரும்ப வந்து, உணவு கொடுத்து விட்டு, திரும்பவும், தந்தையை கட்டி வைப்பான். இப்படியே பல ஆண்டுகளாக, கட்டுப்பட்டு கிடந்த முதியவரை, போலீசார் நேற்று மீட்டனர். மகனிடம், "ஏன் இப்படி செய்தாய்?' என, போலீசார் விசாரித்த போது, "அவர் வீட்டை அசுத்தப்படுத்தி விடுவார்; அதனால் தான், கட்டி வைக்கிறேன். கட்டை அவிழ்த்து விட்டால், வீடு முழுவதும் மலம் கழித்துவிடுவார்' என, மிகவும் சாதாரணமாக கூறியுள்ளான். அந்த, "பாசக்கார' மகன் மீது வழக்கு தொடர போலீசார் முடிவு செய்துள்ளனர். மீட்கப்பட்ட முதியவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நன்றி : Dinamalar