Wednesday, June 12, 2013

தேநீர் குடிக்க இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய குழுக்களால் பயனேதும் கிடையாது - மாறாக சீனாதான் வரும்


பிரதமர் மன்மோகன் சிங் அதிகாரமற்ற பிரதமராக இருப்பதும் முழு அதிகாரமும் ராஜீவ் காந்தியின் மனைவியான இத்தாலியப் பெண் சோனியா காந்தியிடம் இருப்பதும் தெளிவாகின்றது. இதற்கு நல்ல உதாரணம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய குழுக்களாகும்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆளுமை மிக்க பிரதமர் அல்ல என்ற முடிவுக்கு இந்திய தேசம் வந்தே ஆகவேண்டும். இந்த முடிவை இந்திய தேசம் எடுப்பதற்கு நீண்ட காலம் எடுக்காதென்பதும் உண்மை. இத்தகையதொரு முடிபை இந்தியா ஏன் எடுக்க வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், இலங்கை மீது அவர் கொண்டுள்ள சுணைக்கெட்ட தன்மையே முக்கிய காரணம் எனலாம். இந்திய தேசத்தின் பாதுகாப்பு மற்றும் விவகாரங்களில் மறைகரங்களின் செயற்பாடே முக்கியமானது என்று கூறிக் கொண்டாலும் இந்தியப் பிரதமர்களாக இருந்த அன்னை இந்திரா காந்தி, வாஜ்பாய் போன்ற ஆளுமை மிக்க பிரதமர்களின் அதிரடி நடவடிக்கைகள் தான் இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் இன்று வரை உரமாக இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

அவ்வகையில் பிரதமர் மன்மோகன் சிங்கை எடுத்துக் கொண்டால், அவர் அதிகாரமற்ற பிரதமராக இருப்பதும் முழு அதிகாரமும் ராஜீவ் காந்தியின் மனைவியான இத்தாலியப் பெண் சோனியா காந்தியிடம் இருப்பதும் தெளிவாகின்றது. இதற்கு நல்ல உதாரணம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய குழுக்களாகும். 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றிக்குப் பின்னர் இலங்கை அரசு தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது, நடத்தி வருகிறது என்பது உலகிற்குத் தெரியாத விடயமல்ல. போர் முடிவுற்ற கையோடு வன்னியில் இருந்து வெளியேறிய அத்தனை மக்களையும் முடகம்பி வேலிக்குள் அடைத்து அவர்கள் வெளியேற முடியாத அளவில் பெரும் நெட்டூரம் நடத்தப்பட்டது.

அப்போது இந்தியக் குழுக்கள் இலங்கைக்கு வந்தன. எந்தப் பயனும் இல்லை. இப்போதும் இந்தியக் குழுக்கள் வருகின்றன. பயனேதும் கிடையாது. இலங்கைக்கு வருகின்ற இந்தியக் குழுக்கள் சட்டம்பியார் முன் நிற்கும் பக்குவமான மாணவர்களைப் போல கைகட்டி, வாய்பொத்தி பயபக்தியோடு அவர் சொல்வதைக் கேட்டுச் செல்கின்றன. ஆன பிரதமர் இந்தியாவில் இருந்தால் இப்படியா நடக்கும் என்ன? ஒரு பார்த்தசாரதியின் தூது என்ன செய்தது என்பதை பிரதமர் மன்மோகன் புரட்டிப் பார்க்கா விட்டாலும், இலங்கைத் தேநீர் குடிக்க வரும் இந்தியக் குழுக்களாவது அதைப் பார்த்துப் படித்திருந்தால் ஓரளவுக்கேனும் அந்தக் குழுவால் பயன் இருந்திருக்கும். என்ன செய்வது! இலங்கையைப் பார்க்க விரும்பியவர்களை தூதுக் குழுக்களாக்கி அனுப்பினால் சப்புச்சவல்கள்தான் வந்து சேரும். தீர்வு வராது. மாறாக சீனாதான் வரும்.