Wednesday, June 12, 2013

எஸ்.எம்.எஸ்., மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு


ரயில் பயணிகள் தங்களின் மொபைல் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., வழியாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளும் முறை ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரப் போவதாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) தெரிவித்துள்ளது. 

ஐ.ஆர்.சி.டி.சி., தகவல் :

எஸ்.எம்.எஸ்., மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட எண்ணிற்கு டயல் செய்தோ ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இணையதளத்தை பயன்படுத்தாமலே எளிய வசதிகள் படைத்த திறன்கள் கொண்ட போன்கள் மூலமாகவும் இந்த சேவையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், எந்த நேரத்திலும் முன்பதிவு செய்யலாம் என ஐ.ஆர்.சி.டி., மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். டிக்கெட் முன்பதிவிற்காக பயணிகள் இனி இன்டர்நெட்டை பயன்படுத்தவோ அல்லது நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவோ தேவையில்லை எனவும், எந்த வகை மொபைலை பயன்படுத்துபவராக இருந்தாலும் இந்த சேவையை பயன்படுத்தலாம் எனவும் ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது. டயல் செய்யும் முறையில் யூ.எஸ்.எஸ்.டி., எனப்படும் கட்டமைப்பற்ற துணை ஆதரவுடன் எங்கிருந்து டயல் செய்கிறோம் என்ற மெனுவையும் தேர்வு செய்ய வேண்டும். டிக்கெட்டிற்கான கட்டணமும் மொபைல் மூலமே செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கும் இன்டர்நெட் பயன்படுத்தவோ, வாடிக்கையாளர்கள் இதற்கென தனிக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. ரயில் நிற்கும் ஸ்டேஷன்கள், காலியாக இருக்கும் டிக்கெட்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை அறியவும், டிக்கெட்டை முன்பதிவு செய்யவும் ஒரு எளிய வழிகாட்டு மெனுவையும் ஐ.ஆர்.சி.டி.சி., வழங்கி உள்ளது. டிக்கெட் முன்பதிவு மற்றும் பணம் செலுத்துவதற்கான தொலைப்பேசி எண் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யும் முறை :

எஸ்.எம்.எஸ்., மூலம் முன்பதிவு செய்பவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி.,யில் பதிவு செய்திருக்க வேண்டும். மொபைல் எண், பணம் செலுத்தும் வங்கி வாடிக்கையாளருக்கு அளித்துள்ள மொபைல் பணம் அடையாளதாரர் (எம்.எம்.ஐ.டி) எண் மற்றும் மாற்றம் செய்ய முடியாத ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கான அடையாள எண்ணை பயன்படுத்தி எஸ்.எம்.எஸ்., மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பின்னர் பதிவு செய்ததற்கான பரிமாற்று அடையாள எண் வழங்கப்படும். அந்த எண்ணைக் கொண்டு எஸ்.எம்.எஸ்., மூலம் பணத்தை செலுத்தலாம். டயல் செய்யும் முறை மூலம் முன்பதிவு செய்பவர்கள் சேவை எண்ணிற்கு டயல் செய்து டிக் முன்பதிவு சேவையை தேர்வு செய்து, பின் ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் வழங்கப்பட்ட எண் மூலம் முன்பதிவு சேவையை தேர்வு செய்து எந்த ரயில், ரயில் நிலையம் என்ற விபரங்களை அளிக்க வேண்டும். தொடர்ந்து மொபைல் மூலம் பணம் செலுத்துவதற்கான குறியீட்டு எண்ணை குறிப்பிட வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதற்கான உறுதி தகவல் எஸ்.எம்.எஸ்.,மூலம் அனுப்பி வைக்கப்படும்.