Saturday, July 20, 2013

மரியான் திரை விமர்சனம்


கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு அழகான மீனவ கிராமம். அங்கு மீனவராக இருக்கிறார் மரியான் எனும் தனுஷ். ‘மரியான்’ என்பவர் ஆழ்கடலில் மூச்சை அடக்கி ஒரு ஈட்டி மட்டுமே துணை கொண்டு மீன்களை பிடிப்பவர் என்று பொருள்படும்.

மீனவ கிராமத்தில் தன்னுடைய நண்பர்களான அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி ஆகியோருடன் சேர்ந்து மீன் பிடித்து வருகிறார் தனுஷ். அதே ஊரில் மீனவப் பெண்ணாக வரும் பார்வதி தனுஷை ஒருதலையாக காதலிக்கிறார். தன்னுடைய தொழிலில் எப்போதுமே சாவை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும் என்பதால் தனுஷ் பார்வதியை காதலிப்பதை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில், தனுஷின் நண்பர்கள் பார்வதியை காதலிக்க அவனை வற்புறுத்துகின்றனர். ஒருகட்டத்தில் பார்வதி மீது காதல் வயப்படுகிறார் தனுஷ். இருவரும் காதலித்து வருகின்றனர். அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கும் ரவுடி ஒருவனும் பார்வதி மீது காதல் கொள்கிறான். இந்த விஷயம் தனுஷுக்கு ஒருநாள் தெரிகிறது.

அப்போது தனுஷ் அவனை மிரட்டி அனுப்புகிறார். பார்வதியின் அப்பா ரவுடியிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறார். அதனால், அவர் வீட்டுக்கு சென்று ரவுடி பெண் கேட்கிறார். இல்லையென்றால் வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்பிக் கொடுக்கும்படி மிரட்டுகிறார்.

மறுமுனையில் நடுக்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தன் நண்பன் அப்புக்குட்டி குண்டடிபட்டு சடலமாக அவரது உடல் கரை ஒதுங்குகிறது. இதைப் பார்த்து கதறி அழுது கொண்டிருக்கும் தனுஷிடம் பார்வதி நேரில் வந்து, ரவுடி பெண் கேட்டு வந்திருப்பதை சொல்கிறாள். இதையடுத்து பார்வதியின் வீட்டுக்கு வரும் தனுஷ், அந்த ரவுடியை அடித்து விரட்டுகிறார்.

உடனே, ரவுடி வட்டிக்கு கொடுத்த பணத்தை திருப்பித் தராவிட்டால் குடும்பத்தோடு கொன்றுவிடுவேன் என்று பார்வதியின் தந்தையை மிரட்டிவிட்டு செல்கிறான். இதனால் என்ன செய்வதென்று யோசிக்கும் தனுஷ், வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்து இந்த கடனை அடைக்க முடிவெடுக்கிறார்.

அதன்படி 2 வருட ஒப்பந்தத்தில் தென்ஆப்பிரிக்கா செல்கிறார். 2 வருட ஒப்பந்ததில் 1 வருட சம்பளத்தை முன்பணமாக பெற்று அந்த பணத்தில் பார்வதி தந்தையின் கடனை அடைத்துவிட்டு, தென்ஆப்பிரிக்காவுக்கு பயணமாகிறார்.

அங்கு பணிபுரிந்துவிட்டு ஊருக்கு புறப்படும் வேளையில் தனுஷ் மற்றும் அவருடன் பணிபுரியும் நண்பர்களை கடத்திச் சென்று பணம் பறிக்கும் கும்பல் ஒன்று தூக்கிச் சென்றுவிடுகிறது.

இவர்களை பணய கைதிகளாக வைத்து இவர்கள் கம்பெனியிடம் பணம் கேட்கிறது அந்த கும்பல். இதிலிருந்து தனுஷ் தப்பித்து சொந்த ஊர் திரும்பினாரா? பார்வதியை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

தனுஷ் இப்படத்தில் மீனவராக நடிக்கவில்லை, வாழ்ந்தே இருக்கிறார். ஆழ்கடலில் மூழ்கி மூச்சை அடக்கி இவர் மீன் பிடிக்கும் காட்சி மயிர்கூச்செரிய வைக்கிறது. தென்ஆப்பிரிக்காவில் கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்து சென்று, பாலைவனத்தில் தவிக்கும் காட்சியில் நம்மை அழவைக்கிறார். படம் முழுவதும் தனது நடிப்பை அசாத்தியமாக வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை பார்வதி படம் முழுவதும் மேக்கப்பே இல்லாவிட்டாலும் அழகாக இருக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடல்கூட பாடியிருக்கிறார். மீனவ பெண் பனிமலர் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தனுஷிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதில் அழுத்தமாக பதிந்திருக்கிறார்.

நண்பர்களாக வரும் அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, தென்ஆப்பிரிக்கா நண்பராக வரும் ஜெகன், தனுஷ் அம்மாவாக வரும் உமா ரியாஸ்கான் ஆகியோர் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும், தங்கள் கதாபாத்திரத்திற்கு உண்டான நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இயக்குனர் பரத்பாலா இப்படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக இல்லாமல், ஒரு ஆவணப் படம் போல் படமாக்கியுள்ளார். முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் படம் மெதுவாக நகர்கிறது. திரைக்கதையில் இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கின்றன. ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன’ பாடல் கேட்பதற்கு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

மார்க் கோனிக்ஸ் ஒளிப்பதிவில் கன்னியாகுமரி பகுதி மீனவ கிராமம் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பாலைவனம் ஆகியவை நாம் அதற்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

மொத்தத்தில் ‘மரியான்’ வெல்வான்.

Source :123tamilcinema.com