Wednesday, August 28, 2013

தேசிங்கு ராஜா திரை விமர்சனம்


தனது சமகால நாயகர் சிவகார்த்திகேயனுக்கு ‘மனம் கொத்திப்பறவை’ எனும் எவர்கிரீன் படம் தந்தவர் எனும் ஒரே காரணத்திற்காக எஸ்.எழிலின் இயக்கத்தில், அதை, இதை, கதை... எதையும் கேட்காம‌ல் ‘தேசிங்கு ராஜா’ படத்தில் நடிக்க சம்மதித்திருப்பார் போலும் விமல்! படத்தில் டி.இமானின் இசையில், இனிய பாடல்காட்சிகள் தவிர்த்து குதிரையையும் காணோம், குதூகலத்தையும் காணோம்!


கதைப்படி, அடுத்தடுத்த கிராமங்களான புலியூர் கிராமத்திற்கும், கிளியூர் கிராமத்திற்கும் பரம்பரை பரம்பரையாக பகை! காரணம், இரண்டு குடும்பங்கள் பல தலைமுறைக்கு முன் பெண் கொடுத்து எடுத்துக் கொண்டதில், ஒரு கொட்டைப்பாக்கால் ஆரம்பித்த பிரச்னை வெட்டு குத்து என இரு பக்கமும் பல தலைகளை உருள வைத்து விடுகிறது! அந்த பரம்பர‌ை பகையில் நாயகர் விமலின் அப்பாவை, நாயகி பிந்து மாதவியின் அப்பா போட்டுத்தள்ள, பிந்துவின் சகோதரனை விமலின் தாத்தா விணுசக்கரவர்த்தி தீர்த்து கட்டுகிறார். இதனால் ஊரே பகையாகி கிடக்கிறது. இது தெரிந்தும் தெரியாதது மாதிரி இரு ஊரையும் ஒன்று ‌சேர்க்க விமல், பிந்துமாதவியை காதலிக்கிறார்.

இது தெரிந்ததும் பிந்துவின் அப்பா, விமலை போட்டுத்தள்ளும் திட்டத்துடன் பிந்து மாதவியின் காதலை சேர்த்து வைப்பதாக உறுதிகூறி ஊருக்கு ஒதுக்குப்புறமான ‌கோவிலுக்கு அழைத்து வர சொல்கிறார். அங்கு விமல் வந்ததும், விமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் பிந்துமாதவியின் அப்பா ஞானவேல். இதில் வெகுண்டெழும் விமல், உங்கள் கண் முன்னாலேயே உங்கள் மகளுக்கு தாலி கட்டுகிறேன்... என பிந்துவிற்கு கோயில் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் வேண்டுதல் தாலிகளில் ஒன்றை உருவி பிந்துவின் கழுத்தில் கட்ட, இதில் கடுப்பாகும் ஞானவேல், விமலை வெட்டப்பாய, விமலுக்கே தெரியாமல் விமல் பின்னால் வந்த ஊர்காரர்கள் ஞானவேலை தீர்த்து கட்டுகின்றனர்.

தன் கண் முன்னாலேயே தன் தந்தை கொல்லப்பட்ட அதிர்ச்சியில் உறைந்து போகும் பிந்துமாதவி, விமலுடன் குடித்தனம் நடத்த மறுத்து, தன் ஊரிலேயே உறவுகளுடன் தங்கி விடுகிறார். விமல்-பிந்து மாதவி ஜோடி தடை பல கடந்து உண்மை உணர்ந்து மீண்டும் இணைந்தார்களா இல்லை‌யா?! என்பது தான் ‘தேசிங்கு ராஜா’ படத்தின் சிரிப்பும், சீரியஸூமான மீதிக்கதை! ஆனால் அது க்ளைமாக்ஸில் திடீரென, வரும் கபடி போட்டி, சியர்ஸ் ஆட்ட பெண்கள், சீரியஸ் சித்தப்பாவின் திடீர் மனமாற்றம் என ஓவர் காமெடியாகி கடுப்பேற்றுவதை இயக்குநர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்! என்பது நம் ஆதங்கம் மட்டுமல்ல படம் பார்க்கும் ரசிகர்கள் எல்லோரது எண்ணமும் கூட!

விமல், ‘சிகரெட் சுமோகிங் இஸ் இன்ஜூரியஸ் டூ ஹெல்த்’ என டைட்டில் கார்டுக்கு முன் இங்கிலீஷ் எச்சரிக்கை செய்ய ஆரம்பிக்கும் போது கிண்டலாக சிரிப்பொலியிலும், கரவொலியிலும் அதிர ஆரம்பிக்கும் திரை அரங்கம், படம் முழுக்க அதிர்ந்திருந்ததென்றால் ‘தேசிங்கு ராஜா’, பிரமாதமாக இருந்திருக்கும். ஆனால், சீரியஸான வெட்டு - குத்து கதையை காமெடியாக சொல்லுகிறேன் பேர்வழி என... சொதப்பியிருப்பது, பொய்க்கால் குதிரையை நம்பி தேசிங்கு ராஜா, காதல் ராணியை கடத்த போனது மாதிரி கடுப்பேற்றுகிறது!

‘இதயக்கனி’ எனும் விமலின் வித்தியாசமான பெயர், பிந்துமாதவியின் கவர்ச்சி, சூரியின் காமெடி, யுகபாரதியின் அர்த்தம் பொதிந்த பாடல்கள், டி.இமானின் இசை, சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும் சிங்கம் புலி, சாம்ஸ், ரவிமரியா உள்ளிட்டவர்களின் சலம்பல் மைனஸ்களும், சீரியஸாக இருக்க வேண்டிய க்ளைமாக்ஸ், சியர்ஸ் ஆட்டக்காரிகளால் காமெடியாக கவிழ்வதும், ‘தேசிங்கு ராஜா‘-வை ‘டிராஜிடி ராஜா‘ வாக்கி விடுகின்றன!

ஆகமொத்தத்தில் எஸ்.எழிலின் இயக்கத்தில், "தேசிங்கு ராஜா" - "ராஜாதி ராஜா" அல்ல "ரவுசு ராஜா!"

Source:Dinamalar