Sunday, September 8, 2013

பிரதமராக ராகுல் தகுதியானவர் - மன்மோகன் சிங் தகவல்



நான், ஒரு திறந்த புத்தகம். ராகுல் தலைமையின் கீழ், பணியாற்ற தயாராக உள்ளேன். பிரதமர் பதவிக்கு, ராகுல் தான், சரியான தேர்வு,'' என, பிரதமர், மன்மோகன் சிங் கூறினார்.

ரஷ்யாவில் நடந்த, "ஜி - 20' மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று, அங்கிருந்து டில்லி வரும் வழியில், விமானத்தில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: "அடுத்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றால், மூன்றாவது முறையாக, பிரதமராக பதவியேற்பீர்களா...' என, என்னிடம், திரும்ப திரும்ப கேட்கப்படுகிறது. நானும், இதற்கு பல முறை பதில் அளித்து விட்டேன். அடுத்த லோக்சபா தேர்தலுக்குப் பின், காங்., மேலிடம், எனக்கு எந்த பணி கொடுத்தாலும், அதை செய்வதற்கு ஆர்வமாகவும், தயாராகவும் இருக்கிறேன். பிரதமர் பதவிக்கு, ராகுல் தான், சரியான தேர்வு. அவரின் தலைமையின் கீழ் பணியாற்ற, தயாராக இருக்கிறேன். இது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமும் கூட. நான், ஒரு திறந்த புத்தகம். என் நடத்தை குறித்து, யாராவது ஆய்வு செய்தால், அதை தடுக்க மாட்டேன். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை, நிரந்தர எதிரிகளும் இல்லை; நிரந்தர நண்பர்களும் இல்லை. திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைவதற்கு, எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது. மம்தா பானர்ஜி, சில காலத்துக்கு முன், காங்கிரசில் இருந்தவர். அவரின் கட்சியுடன் கூட்டணி அமைந்தால், அது, காங்கிரசுக்கு மகிழ்ச்சியைத் தரும். திரிணமுல் மட்டுமல்ல; ஒருமித்த கருத்துடைய, மதச் சார்பற்ற, எந்த கட்சியுடனும், கூட்டணி அமைக்க, காங்., தயாராக உள்ளது. பயங்கரவாதம், தொடர்ந்து நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதை தடுக்க வேண்டும். பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீபுடன் பேச்சு நடத்துவது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே, சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டதும், இதுகுறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.