Saturday, December 14, 2013

இவன் வேற மாதிரி - திரை விமர்சனம்


சட்டக்கல்லூரியில் சொந்த பகை காரணமாக தன்னால் சேர்க்கப்பட்ட மாணவர்களை வைத்து கலவரத்தை தூண்டிவிடுகிறார் சட்ட அமைச்சர். இந்த கலவரத்தில் மூன்று மாணவர்கள் இறந்துவிட, இதுகுறித்து மீடியாவும், பொதுமக்கள் ஆதங்கப்படுகிறதே தவிர யாரும் இதை தட்டிகேட்க முன்வரவில்லை. துணிந்து தட்டிகேட்க முடிவு செய்கிறார் விக்ரம்பிரபு.

பரோலில் வந்த சட்ட அமைச்சரின் தம்பியை கடத்தி, புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் 18 மாடி கட்டிடத்தின் மேல்மாடியில் உள்ள டாய்லட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்கிறார். 15வது நாள் அவர் ஜெயிலுக்கு போகாவிட்டால், சட்ட அமைச்சருக்கு பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் சட்ட அமைச்சர் ஜெயிலரை கையில் போட்டுக்கொண்டு, தனது தம்பி ஜெயிலுக்கு வந்தது போல காண்பித்துவிட்டு, தன்னுடைய தம்பியை கடத்தியவனை தன்னுடைய ஆட்கள் மூலம் தேடுகிறார். இது எதிர்க்கட்சிக்கு தெரியவந்து, பின்னர் சட்ட அமைச்சர் பதவியையும் இழந்து கைதாகிறார். அதன்பிறகு பூட்டி வைத்திருக்கும் தம்பியை வெளியே விடுகிறார் விக்ரம் பிரபு.

வெளியே வந்த தம்பி, விக்ரம் பிரபுவை பழிவாங்க துடிக்கிறார். ஒரு சின்ன க்ளு கிடைக்கிறது. அதை வைத்து விக்ரம் பிரபுவின் காதலி சுரபியை கடத்தி, விக்ரம் பிரபு குறித்து அவரிடம் கேட்கிறார். இந்நிலையில் போலீஸும் வில்லனை தேடிக்கொண்டிருக்க, விக்ரம் பிரபுவும் தன்னுடைய காதலியை தேடுகிறார். காதலியை மீட்டாரா, வில்லனை பழிவாங்கினாரா என்பதுதான் கதை.

விஷுவல் கம்யூனிகேசன் முடித்துவிட்டு வேலை தேடும் சராசரி இளைஞர் வேடம் விக்ரம் பிரபுவுக்கு. அமைதியான மற்றும் ஆக்ரோஷமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி தன்னுடைய குடும்ப மானத்தை காப்பாற்றியிருக்கிறார்.காதல் காட்சிகளில் மட்டும் அவர் இன்னும் தேறவில்லை என்பது தெரிகிறது. ஒருவேளை அதில் அவருக்கு சொந்த அனுபவம் எதுவும் இல்லையே என்று தெரியவில்லை. ஆர்யா போன்றோரிடம் அவர் டியூஷன் எடுப்பது நல்லது.

கதாநாயகி சுரபிக்கு ஓரளவு நடிப்பதற்கேற்ற கேரக்டர். ஆரம்பத்தில் எல்லா படங்களிலும் வருவது போல மோதல், பின்னர் காதல் என்று சராசரி நடிப்பை வெளிப்படுத்தி வந்த சுரபி, வில்லனால் கடத்தப்பட்ட பின்பு, ஓரளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழில் இன்னொரு கதாநாயகி ரெடி.

போலீஸாக வரும் கணேஷ் வெங்கட்ராமனிடம் நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் அவருக்கு கொடுத்த கேரக்டர் ரொம்ப டம்மிதான்.

வில்லன் வம்சி கிருஷ்ணாவுக்கு சவாலான வேடம். ஏற்கனவே 'தடையற தாக்க' படத்தில் இதே போன்ற ஒரு வேடம் ஏற்றிருந்தாலும், நல்ல நடிப்பு. தமிழ் சினிமாவில் காணப்படும் வில்லன் வெற்றிடத்தை நிரப்ப நல்ல வாய்ப்பு இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் கலவரத்தை கையில் எடுத்திருக்கும் சரவணன், திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார். பேங்க் அக்கவுண்ட் எண்ணை வைத்து வில்லன், ஹீரோவை கண்டுபிடிக்கும் ட்விஸ்ட் நன்றாக இருந்தாலும், எளிதில் யூகிக்க முடிகிறது. சமுதாய அவலங்களை அங்கங்கே சாடும் நறுக் வசனங்கள், தெளிவான திரைக்கதை, சந்தானத்தை நம்பாமல், தேவையில்லாத காமெடி டிராக்கை இணைகாமல் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருப்பது, தனது பாணியில் காதல் காட்சியை சுருக்கமாக அதேசமயம் தெளிவாக கொண்டு வந்தது என்று படம் முழுவதும் சரவணனின் டச் தெரிகிறது.

ஒரு சாதாரண கல்லூரி மாணவியான ஹீரோயினிடம் இருந்து உண்மையை வரவழைக்க ஒரு கொடுமையான வில்லனுக்கு வழி தெரியாதா? சும்மா கட்டிப்போட்டு மட்டும் அடித்து உண்மையை சொல்? என்றா சொல்லுவான்? வேறு மாதிரி யோசித்திருக்கலாம், பரோலில் வந்த ஒரு கைதி, கொலைகளை சர்வ சாதாரண செய்வது, போலீஸுக்க் தெரியாமல் சென்னை முழுவதும் வண்டியில் சுற்றுவது போன்ற காட்சிகள் நம்பும்படியாக இல்லை. வில்லனை கண்டுபிடிக்க விக்ரம் பிரபு செய்யும் முயற்சிகளை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம், போன்ற சிறு சிறு தவறுகள் இருந்தாலும் மொத்தத்தில் ஒரு நல்ல நிறைவான படத்தை கொடுத்த சரவணனுக்கு பாராட்டுக்கள்.

'எங்கேயும் எப்போதும்' இசையமைத்த சத்யாதான் இதிலும் இசை. பாடல்கள் சுமார் ரகம். ஆனால் சென்ற படத்தில் சாயல் தெரிகிறது. பாடல் காட்சியமைப்பும் அந்த படத்தின் நிழல்போல இருக்கிறது

மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடத்தில் ஹீரோயினை பொம்மை போல நிற்கவைத்து அதை பலவித ஷாட்டுகளில் எடுத்த ஒளிப்பதிவு இயக்குனர் ஷக்திக்கு பாராட்டுக்கள்.

உண்மையிலேயே வித்தியாசமான 'வேற மாதிரி படம்தான்" என்பதில் சந்தேகவில்லை.