Saturday, December 14, 2013

கோலாகலம் - திரை விமர்சனம்


திருச்சி கல்லூரி ஒன்றில் நான்கு பேர் நண்பர்களாக பழகி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் ஹீரோவாக அமல் வருகிறார். முதலில் சைக்கிள் பந்தயம் ஒன்றில் வெற்றிபெற்று நான் ஹீரோ என்று நிரூபிக்கிறார். பின்னர் நண்பர்களோடு ஜாலியாக மாமா, மச்சான், மாப்பிள்ளை என்று உறவு முறை வைத்து செல்லமாக கூப்பிட்டு, உண்மையான உறவு முறை போன்று பழகி வருகிறார்கள்.

தன் நண்பர்களில் ஒருவனின் தங்கை சரண்யா மோகன். இவருடன் சாதாரணமாக பேசி பழகி வருகிறார். இந்நிலையில் நாயகியின் பெரிய அண்ணன் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் நாயகன் கலந்து கொள்கிறார்.

இந்நிகழ்ச்சியில் நாயகியின் உறவுக்காரர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். அப்போது நாயகியின் முறைமாமனான ஒருவர், நாயகியிடம் கேலி, கிண்டல் மற்றும் சில்மிஷம் செய்கிறார். இதைப் பார்க்கும் நாயகன் அந்த முறைமாமன் மீது கோபப்படுகிறார். நிகழ்ச்சியின் முடிவில் அந்த முறைமாமன் வீட்டை விட்டு கிளம்பும் போது நாயகன் பின் தொடர்ந்து அவரை தாக்கி கையை உடைத்து விடுகிறார். இவர் நாயகியின் முறைமாமன் என்று தெரியாமலேயே இதை செய்து விடுகிறார்.

அடிப்பட்ட அவர், நாயகனை பழிவாங்க காத்துக்கொண்டிருக்கிறார். இதற்கு பின்னர் நாயகி அண்ணனின் திருமணம் நடக்கிறது. அதில் உறவுக்காரர்கள் அனைவரும் கலந்துக் கொள்கிறார்கள். அதில் நாயகன் கலந்துக் கொள்வான், அவனை அடிக்க வேண்டும் என்று நாயகனின் முறைமாமன் கலந்துக் கொள்கிறார். நிகழ்ச்சியின் இறுதியில் வரும் நாயகனிடம் திருமணம் முடிந்தவுடன் அவரிடம் சண்டைப் போடுகிறார்.

இந்த சண்டை பெரும் சண்டையாக மாறி திருமண மண்டபத்தில் இருந்த உறவுக்காரர்கள் அனைவரும் நாயகனை அடித்து வெளியேற்றுகிறார்கள். நாயகனின் நண்பன், உறவுக்காரர்களா? நண்பனா? என்று வரும்பொழுது உறவுக்காரர்கள் தான் முக்கியம் என்று நாயகனை வெளியேற்றுகிறான். இதனால் ஆத்திரம் அடையும் நாயகன், நான் உன்னை இதுவரை மாமா, மச்சான் என்று நண்பனாக கூறினேன். இனிமேல் உண்மையாக உனக்கு மச்சானாக மாறுவேன்.

உன் தங்கையை நான்தான் திருமணம் செய்வேன் உன் முறைமாமனுடன் உன் தங்கைக்கு திருமணம் நடந்தால், அவளை தூக்கிச் செல்வேன் என்று சவால் விட்டு செல்கிறார். பிறகு நாயகியிடம் நடந்ததை தெளிவுபடுத்தி மன்னிப்பு கேட்க, நாயகன் செல்கிறார். மன்னிப்பு கேட்ட நாயகனிடம் நான் உண்மையிலேயே உன்னை காதலிக்கிறேன் என்று நாயகி கூறுகிறார்.

அண்ணனிடம் விட்ட சவாலை உன்னால் செய்ய முடியுமா? என்று கேட்கிறார். இதைக்கேட்டு குழப்பத்தில் இருக்கும் நாயகன் தன் சவாலை முடித்தாரா? இல்லை, நாயகியை முறைமாமன் திருமணம் செய்து கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

நாயகனாக அறிமுகமாகியிருக்கும் அமல், நடிக்க முயற்சித்திருக்கிறார். நாயகி சரண்யா மோகன் நீண்ட நாட்களுக்குப்பிறகு தமிழில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை திறம்பட செய்திருக்கிறார். மீண்டும் பல படங்களில் பார்க்கலாம் என்று நம்புவோம்.

கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, வியட்நாம் வீடு சுந்தரம், பாண்டியராஜன், மனோபாலா ஆகிய காமெடி நடிகர்கள் படத்தில் இருந்தாலும் இவர்களுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. பரணி இசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. இசையிலும் ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

லாஜிக் அங்காங்கே மிஸ் ஆகியிருக்கிறது. இதை இயக்குனர் சுரேந்திரன் சரி செய்திருந்திருக்கலாம். உறவுக்காரர்களும், நண்பர்களுக்கும் இடையே உள்ள பந்தத்தை கதையாக எடுத்துக் கொண்ட இயக்குனர், திரைக்கதையில் அதைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறார். மொத்தத்தில் 'கோலாகலம்' கொண்டாட்டமில்லை.