Saturday, March 1, 2014

தெகிடி திரைவிமர்சனம்



கதாநாயகன் அசோக்செல்வன், துப்பறியும் நிறுவனமொன்றில் வேலைக்குச் சேருகிறார். சேர்ந்தவுடன் சில பேரைப் பற்றிய அன்றாட நடவடிக்கைகளைத் திரட்டித் தருகிற பொறுப்பு அவரிடம் கொடுக்கப்படுகிறது. அவரும் அவருடைய வேலையைச் செவ்வனே செய்ததன் விளைவு சம்பந்தப்பட்ட நபர்கள் எல்லாம் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். 

கதாநாயகனுக்கு இந்தவிசயம் தெரிந்ததும் அதிர்ச்சியடைகிறார். அடுத்து எல்லாக் கதாநாயகர்களும் என்ன செய்வார்களோ அதையே இவரும் செய்கிறார். குற்றம் எங்கே நடக்கிறது?என்பதைத் தேடிக்கண்டுபிடித்துவிடுகிறார். 

வேலை செய்கிற இடத்தில் ஒரு தப்பு நடக்கிறதென்றால் வேலையை விட்டுவிட்டுப் போவதுதானே சாதாரணமனிதர்களின் செயலாக இருக்கும். இந்தப்படத்தில் சாதாரணமனிதனாகக் காட்டப்படும் நாயகன், தப்பு நடக்கிறதென்று தெரிந்து அதை விட்டுவிட்டு ஓடாமல், என்ன நடக்கிறதென்று கண்டுபிடிக்கக் காரணமாகக் காதல் வந்துவிடுகிறது. 

அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை, கதாநாயகியைப் பின்தொடர்ந்து சென்று அவரைப் பற்றி விவரணஅறிக்கை கொடுப்பது. அப்படிச் செய்துவிட்டுப் போய்விட்டால் திரைக்கதை எப்படி வளரும்? முதலாளியின் கண்டிப்பான 'எந்தநேரத்திலும் சப்ஜெக்டை நெருங்கக்கூடாது' என்கிற அறிவுரையையும் மீறி நாயகன் நாயகியைக் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார். 

வழக்கம்போல நாயகனின் காதலை ஊக்குவிக்க இந்தப்படத்திலும் நகைச்சுவைநடிகர் காளி துணையிருக்கிறார். நாயகன், நாயகியின் முதல்சந்திப்பும், அடுத்து நாயகியே ஒரு 'சப்ஜெக்ட்' டாக (கண்காணிக்கப்படவேண்டியவர்)நாயகனிடம் வருவதும் சுவையான காட்சிகள். நாயகி தங்கியிருக்கும் வீடு, நாயகனின் தந்தை வேடம் ஆகியன சின்னச்சின்ன சுவாரசியங்கள்.

நாயகனாக நடித்திருக்கும் அசோக்செல்வன், நாயகியாக நடித்திருக்கும் ஜனனி, நகைச்சுவை நடிகர் காளி, காவல்அதிகாரி ஜெயப்பிரகாஷ் உட்பட படத்தில் இருக்கும் எல்லோருமே அளவாக நடித்திருக்கிறார்கள். நாயகியின் கண்கள் அவருக்குப் பெரியபலம். எல்லா உணர்வுகளையும் முகத்தை முந்திக்கொண்டு கண்கள் வெளிப்படுத்திவிடுகின்றன.

கமுக்கமாகச் செய்யும் இந்த வேலையால் உனக்கான அங்கீகாரம் கிடைக்காது என்று பேராசிரியர் சொல்லும் போது, மனத்திருப்தி கிடைக்கும் என்று நாயகன் சொல்வது, மனச உறுத்துற வேலைய மறுபடி செய்யாதே அது பழகிப்போய்விடும் என்று நண்பன் சொல்லுவது உட்பட பல வசனங்கள் பளிச்சென்று வந்துவிழுந்திருக்கின்றன. இயக்குநர் பி.ரமேஷே வசனங்களை எழுதியிருக்கிறார்.

நல்ல பேராசிரியராக இருப்பவர் பணத்துக்காக மனம் மாறுவது, காப்பீட்டுநிறுவனத்தின் மேலாளர் அவருக்குத் துணைநிற்பது ஆகிய விசயங்கள் சரியென்று பட்டாலும் அதற்காகக் கொலைகள் செய்கிற அளவுக்குப் போவார்களா? நாயகன் தேடிப்போகிற நேரத்தில் அவருடைய கண்ணெதிரிலேயே கொலைகள் நடப்பது எதிர்பார்க்கிற மாதிரியே இருக்கின்றன. வலிந்து செய்யப்படுகிற அந்தக்கொலைகள் செய்கிறவர்களின் புத்திசாலித்தனத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

தினேஷ்கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம், நிவாஸ்கேபிரசன்னாவின் இசையில் கபிலனின் பாடல்வரிகள் நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையில் அவர் கூடுதல்கவனம் செலுத்தவேண்டும்.

எடுத்துக்கொண்ட கதைக்கு தன்னாலியன்ற அளவு நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறார் இயக்குநர். சரியான இடத்தில் இடைவேளை விட்டிருப்பதும், படத்தின் இறுதிக்காட்சியிலும் இந்தக்கதை முடியவில்லை இன்னும் தொடர வாய்ப்பிருக்கிறது என்பது போலக் காட்சி வைத்திருப்பதும் ரசிக்கவைக்கிறது. திரைக்கதை கொஞ்சம் வேகமாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும். காட்சிகள் மிகமெதுவாக நகருவதைப் போன்றதொரு உணர்வு இருக்கிறது, அதனால் திரையரங்கில் பல சலிப்பொலிகளைக் கேட்கமுடிகிறது.

அதையும் தாண்டி, படித்தவன் பாவம் செய்தால் அய்யோவென்று போவான் என்கிற சொல்லுக்கேற்ப படத்தின் கருத்து இருப்பதால் இதை நல்லபடம் என்று சொல்லலாம்.