Friday, February 28, 2014

வெற்றிமாறன் ஐ.பி.எஸ் திரை விமர்சனம்


மும்பையில் மிகப்பெரிய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன்லால். இவர், அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கும் அதிரடி போலீஸ்காரராக வலம் வருகிறார். இந்நிலையில், மர்ம கும்பலால் பள்ளிச் சிறுமி கடத்தப்படுகிறாள். அவளை கடத்திய கும்பல் யார் என்பதை விசாரிக்கும் மோகன்லால், அந்த கும்பல் இது போல் பள்ளிச் சிறுமிகளை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலையை செய்து வருவது தெரிகிறது. அதன்படி, கடத்திய சிறுமிகளை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்புவதும் தெரிகிறது. உடனே, மோகன்லால் அந்த கும்பலை தேடி கேரளாவுக்கு வருகிறார்.

மும்பையில் கடத்தியது போன்றே கேரளாவிலும் சிறுமி ஒருவள் கடத்தப்படுகிறாள். இந்த கடத்தல் வேலைகளை செய்வது யார் என்பதை துப்பறியும் மோகன்லால் இறுதியில் அந்த கும்பலை பிடித்தாரா? சிறுமிகளை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

ஐ.பி.எஸ். அதிகாரியாக மோகன்லால் மிடுக்கான தோற்றத்துடன் வலம் வருகிறார். ஆனால், படத்தில் இவர் ஒரு காட்சியில் கூட போலீஸ் உடை அணிந்திருப்பதை பார்க்க முடியவில்லை. யாரையும் பாரபட்சம் இன்றி அடித்து துவைப்பது, யாருக்கும் மரியாதை கொடுக்காதது என துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கடத்தப்பட்ட தனது மகளை காப்பாற்ற துடிக்கும்போது பாசத்தில் நம்மையும் நெகிழ வைக்கிறார்.

படத்தில் மோகன்லாலுக்கு இணையாக பேசப்படுவர் வில்லன் முரளி சர்மா தான். இவருடைய ஆண்மை இழப்புக்கு மோகன்லால் காரணம் என்பதால் அவரது மகளை பழிவாங்க துடிப்பதும், சோனாவுடம் நெருக்கமாக இருக்கும் காட்சியில் தன்னால் அந்த சுகத்தை அனுபவிக்க முடியவில்லையே என எண்ணி அழுவதுமாக நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். இறுதிக்காட்சியில் சிரித்து, சிரித்து மோகன்லாலை அழவைப்பதில் சிகரம் தொடுகிறார்.

மற்றபடி, படத்தில் வரும் மலையாள நடிகர் முகேஷ், சோனா உள்ளிட்ட பலரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கஷ்டப்பட்டு சம்பாதிப்பதில் காட்டும் அக்கறையை, அவர்கள் பாதுகாப்பில் காட்டுவதில்லை என்பதை வலியுறுத்தி படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் மேஜர் ரவிக்கு சலாம் போடலாம். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகளை நீளமாக வைத்து விறுவிறுப்பை குறைத்திருக்கிறார். நிறைய இடங்களில் வசனங்கள் புரியவில்லை.

படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் ஒரு பாடலைத் தவிர வேறு பாடல்கள் இல்லை. ஆரம்ப பாடலும் கேட்கும்படியாக இல்லை. பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஸ்ரீகுமார் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் பளிச்சிட்டாலும், பல இடங்களில் தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது.

மொத்தத்தில் ‘வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.,’ வேகம் இல்லை.

நன்றி: மாலைமலர்