Monday, May 26, 2014

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி


இது வரை இல்லாத வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று பா.ஜ., தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி பீடத்தில் அமர்கிறது. பா.ஜ.,வில் குஜராத்தை சேர்ந்த நரேந்திரமோடி இன்று மாலை 6.10 மணிக்கு பிரதமராக பதவியேற்று கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் திறந்த வெளி பந்தலில் மோடியுடன் அமைச்சர்களாக 44 பேர் பொறுப்பேற்று கொண்டனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மோடி பதவியேற்பு விழாவில் , மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரதீபாபாட்டீல் , துணை ஜனாதிபதி அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல், பதவிக்காலம் முடிந்த சபாநாயகர், மீராகுமார், பூட்டான் மன்னர், மொரிஷீயஸ் அதிபர் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, வாழும் கலை குரு ரவிசங்கர்ஜி, அனில் அம்பானி, கோகிலா அம்பானி, நடிகர் சல்மான்கான், ஹேமா மாலினி, இசையமைப்பாளர் பப்பி லஹிரி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்க வந்த அனைத்து முக்கிய பிரமுகர்களும் மன்மோகன்சிங்கிற்கு வணக்கம் தெரிவித்தனர்.

இது வரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக இந்திய பிரதமர் பதவியேற்கும் விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களான ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, நேபாள் பிரதமர் கொய்ராலா, மாலத்தீவு அப்துல் கயூம், வங்கதேச சபாநாயகர் , ஆகியோர் பங்கேற்கின்றனர். உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஏழை தாயின் மகன்: * கடந்த வாரத்தில் பா.ஜ., கட்சி கூட்டத்தில் நடந்த கூட்டத்தில் மோடி கண்ணீர் விட்டு கலங்கியபடி பேசுகையில், நான் ஒரு ஏழைத்தாயின் மகனாக உங்கள் முன்நிற்கின்றேன். இந்நாட்டு ஏழைகளை காக்கும் அரசாக எனது புதிய அரசு இருக்கும் என்றார்.

* மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து இது போன்ற வரலாற்று புகழ் வாய்ந்த வெற்றியை அளித்துள்ளனர். மக்களின் எண்ணமும், நம்பிக்கையும் ஈடேறும் அளவிற்கு நாம் பணியாற்ற வேண்டும்.


* ஆட்சி குறித்து நான் ரிப்போர்ட் கார்டு தருவேன் என்றும் உறுதியளித்தார்.


இன்று மாலை பொறுப்பேற்ற பின்னர் முதல் பணியாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் சார்க் நாடுகளின் தலைவர்களை சந்தித்து அண்டைய நாடுகளின் உறவு குறித்து விவாதிக்கிறார்.


புதிய உறவை ஏற்படுத்தும் : மோடி பதவியேற்பு விழாவிற்காக, தான் இந்தியா வந்திருப்பதை சிறந்த தருணமாக கருதுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். டில்லியில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நவாஸ் ஷெரீப் கூறியதாவது, தற்போதைய அளவில் இருநாடுகளுக்கிடையே நிலவி வரும் வேறுபாடுகள், அவநம்பிக்கை உள்ளிட்ட எதிர்மறையான அம்சங்களை களைவதற்கான சிறந்த வாய்ப்பாக, இப்பயணத்தை நான் கருதுகிறேன். கலை , பாரம்பரியம் உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் ஒன்றுபட்டு விளங்கும் நிலையில், அனைத்து விவகாரங்களிலும் இணைந்து செயல்படும் பொருட்டு, ஒரு புதிய உறவை, இப்பயணம் ஏற்படுத்தும் என்று தான் கருதுவதாக ஷெரீப் கூறியுள்ளார்.


44 பேர் அமைச்சர்கள் : நரேந்திரமோடி அமைச்சரவையில் மோடி உள்பட 24 பேர் காபினட் அந்தஸ்து கொண்ட மொத்தம் 45 பேர் அமைச்சர்களாகின்றனர். இதில் 11 பேர் இணைஅமைச்சர்களாகவும், 10 பேர் தனிப்பொறுப்பாகவும் பதவி வகிப்பர்.


7 பெண்களுக்கு காபினட் அந்தஸ்து : மோடி தலைமையில் பொறுப்பேற்கும் அமைச்சரவையில் 7 பெண்களுக்கு காபினட் அந்தஸ்து அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தர்கண்ட், இமாச்சல், கேரளா, மாநிலத்திற்கு மத்தியஅமைச்சர் யாருமில்லை. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு அமைச்சரவையில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.


தமிழகத்திற்கு ஒரு அமைச்சர்: தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இணை அமைச்சரானார்.


தமிழக முதல்வர் ஜெ., புறக்கணிப்பு: இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெ., பங்கேற்கவில்லை. இது போல் ம.தி.மு.க., தரப்பில் டில்லியில் கறுப்பு கொடி போராட்டம் நடத்திய வைகோ உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோடி பதவியேற்பு விழாவில் திரை நட்சத்திரங்கள் , பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், பங்கேற்பதாக இருந்தது. ஆனால் லதா மங்கேஷ்கர் உடல் நலம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை.ரஜினிக்கு அழைப்பு விடுத்தும் இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாக பங்கேற்காமல் ஒதுங்கி கொண்டார். மோடியின் வேட்பு மனுவை முன்மொழிந்த டீக்கடைக்காரர் கிரன்மகிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

Source : Dinamalar