Friday, August 15, 2014

சிநேகாவின் காதலர்கள் திரை விமர்சனம்


ஒரு பெண்ணின் காதலும், அந்த காதலை அந்த பெண் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதையும் சொல்லப்பட்டிருக்கும் படம் தான் ‘சிநேகாவின் காதலர்கள்’.

பெண் பார்க்க வருபவரிடம், ”தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுங்கள்”, என்று சொல்கிறார் நாயகி கீர்த்தி. ஆனால், அந்த நபரோ கீர்த்தியை காதலிக்க தொடங்க, தன்னை நிராகரித்ததற்கான காரணத்தை கேற்கிறார். அதற்கு என்னுடன் கொடைக்கானலுக்கு வரவேண்டும் என்று கூறி, அவரை கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லும் கீர்த்தி, போகும் வழியில் தனது காதல் கதைகளை அவரிடம் சொல்கிறார்.

கல்லூரி படிக்கும் போது ஒரு காதல், பணிபுரிய சென்னைக்கு வந்த இடத்தில் ஒரு காதல், வேலை விஷயமாக கொடைக்கானலுக்குச் சென்ற போது அங்கு ஒரு காதல், என்று தனது காதலர்களைப் பற்றி பட்டியலிடம் கீர்த்தி இறுதியில் யாருடன் ஒன்று சேர்ந்தார்? அவருக்கு ஏன் இத்தனை காதல் என்பது தான் சிநேகாவின் காதலர்கள் படத்தின் கதை.

சிநேகா என்ற வேடத்தில் நடித்துள்ள கீர்த்தி, இதற்கு முன்பு அத்வைதா என்ற பெயரில் பல படங்களில் நடித்திருந்தாலும், இப்படத்தில் தான் முழுமையான நாயகியாக நடித்துள்ளார். கல்லூரி மாணவியாக சக மாணவ, மாணவிகளை கலாய்ப்பதிலும் சரி, காதலர்களிடம் இருந்து விலகுவதிலும் சரி, கதாபாத்திரத்தை பலப்படுத்தும் வகையில் நடித்துள்ளார். தனது கதாபாத்திரம் எப்படி பட்டது என்பதை உணர்ந்து நடித்துள்ள இவர், முழு படத்தையும் ரொம்ப சுலபமாகவே தூக்கி சுமந்துள்ளார்.

சிநேகாவின் காதலர்களாக நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இரா.ப்ரபாகர் இசையில் “கண்ணகியின் கால் கொலுசை கழட்டிவிட்ட...” என்ற பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருந்தாலும், மற்ற பாடல்கள் சுமார் ரகமாகவே உள்ளது.

கல்லூரி படிப்பின்போதே காதல் வந்தாலும், அந்த காதல் தனது படிப்பையும் எதிர்காலத்தையும் பாதிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் நாயகி, உதவி இயக்குநர் ஒருவர், ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அவரை காதலிக்க தொடங்குகிறார், அந்த காதலும் அவருக்கு தோல்வியில் முடிய, ஜாதி பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை மீண்டும் சமுதாயத்தில் வாழ வைக்க காதலிக்க தொடங்குகிறார். இப்படி தொடர்ந்து காதலித்தாலும், அந்த காதலை அவர் கையாளும் விதத்தை இயக்குநர் காட்டிய விதத்திற்கு ஆயிரம் அப்ளாஸ் கொடுக்கலாம். மொத்தத்தில் காதல் என்றால் என்ன? அதை பெண்கள் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை எளிமையாக அதே சமயத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் முத்துராமலிங்கன்.

இத்தனை காதல்கள் படத்தில் இருந்தாலும், அத்தனை காதல் காட்சிகளையும் எந்தவித நெருடங்களும் இல்லாமல், பெண்கள் பார்க்ககூடிய அளவுக்கு காட்சிகளை கண்ணியமாக படமாக்கிய இயக்குநருக்கு சபாஷ் சொல்லியாகவே வேண்டும்.

படத்தில் காதல் மையமாக இருந்தாலும், அதையொட்டி வரும் உதவி இயக்குநர்களின் கதை, இன்னும் நமது சமூகத்தில் இருக்கும் ஜாதி கொடுமை போன்றவைகளையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதிலும் உதவி இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்க படும் பாட்டை, ரொம்ப அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்.

படத்தின் பட்ஜெட் குறைவாக இருந்தாலும், நிறைவான வசனங்களைக் கொடுத்த முத்துராமலிங்கத்தை அதற்காகவும் தனியாக ஒரு முறை பாராட்டலாம்.

தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் குறைவு. அதிலும் மக்கள் பார்க்ககூடிய அளவுக்கு, அதிலும் பெண்களே பார்க்ககூடிய அளவுக்கு வெளியாகும் படங்கள் மிக மிக குறைவே, அந்த மிக மிக குறைவான படங்களின் வரிசையில் முக்கியமான ஒரு படம் தான் ‘சிநேகாவின் காதலர்கள்’.