Saturday, June 14, 2014

நான் தான் பாலா திரை விமர்சனம்



நீண்ட இடைவெளிக்கு பின் விவேக்கின் "கம்-பேக்" மூவி.. இதுவரை காமெடியனாக நம்மை சிரிக்க வைத்த விவேக் இதில் கொஞ்சம் சீரியஸான கதாப்பாத்திரத்தில் வந்து கைதட்டல்களை அள்ளுகிறார்

ஏழை புரோகிதர் பாலாவின் குடும்பம் நேர்மையும், ஒழுக்கமும் நிறைந்தது. பெருமாளின் நகைகளை கொள்ளையடித்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்டு நேர்மையாக இருந்ததால் சட்டத்தின் பிடியில் சிக்கி ஜெயிலுக்கு போகிறார் பாலாவின் தந்தை. பெயிலில் எடுக்க உறவினர்கள் உதவ மறுத்துவிட கடவுளிடம் உதவி கோருகிறான் பாலா. கடவுள் அனுப்பும் தேவதூதன் போல் வரும் பூச்சி அவனுக்கு பண உதவி செய்ய பாலா தந்தையை பெயிலில் எடுக்கிறான். ஆனால் இந்தப் பூச்சி கடுவா எனும் பணத்திற்கு ஆளை மட்டையாக்கும் ஒருவனிடம் அடியாளாக சிறுவயதிலிருந்தே விசுவாசத்துடன் (?!!) வளர்ந்து வருகிறான். ஜெயிலிலிருந்து வெளிவரும் பாலா குடும்பத்தை ஊர் ஒதுக்கி வைக்கிறது.. மகனுக்கு தொல்லை கொடுக்க விரும்பாமல் தந்தையும் தாயும் நீரில் மூழ்கி வைகுண்டம் செல்கின்றனர்

அனாதையாகிவிட்ட பாலாவை தன்னுடனே தங்க வைக்கும் 'பூச்சியை' மனிதனாக்குகிறான் பாலா. இதற்கிடையில் பாலாவை பார்த்து பரிதாபப்படும் "போளி" விற்கும் ஒரு பெண் போளியுடன் சேர்த்து தன் மனதையும் கொடுக்கிறாள். பூச்சியால் கொல்லப்பட்ட ஒருவனின் அண்ணன் தம்பியின் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கிறான். ஒரு சிக்கலான நிலைமையில் பாலா நட்பா, காதலா என்று முடிவெடுக்க வேண்டி வருகிறது. பாலா எடுக்கும் முடிவே கிளைமாக்ஸ்.

காமெடி மட்டுமல்ல தனக்கு நவரசங்களும் கைவசம் என்று "அந்நியன்" அம்பியாய் வலம் வருகிறார். 'சாமி' திரைப்படத்தில் இதே போன்ற ஒரு கதாப்பாத்திரத்தில் நகைச்சுவையாக மக்களின் மூடநம்பிக்கைகளையும், தீண்டாமையையும் சொன்ன போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கிண்டல் செய்வதாகவும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களின் மன உணர்வுகளை காயப்படுத்துவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதில் அதே கருத்துகளை ஆரவாரமில்லாமல் சொல்லும் போது அது யார் மனதையும் புண்படுத்துவதாய் இல்லை என்பது ஆறுதல்.. விவேக்கின் ஜோடி ஸ்வேதா ஒக்கே.. ஆனா கோலிவுட்ல தாக்கு பிடிக்க இது போதாது அம்மணி.. கடைசி சீனில் "பாட்டி எனக்கு பாலா வேணும்" என்று இவர் கூறும் போது "ரெண்டு போளி வேணும்" என்று சொல்வது போலவே இருக்கிறது இவர் உடல்மொழி. 

விவேக் ஹீரோவாகிவிட்டதால் அவருடன் பல படங்களில் நடித்த செல் முருகன் (ஏழரை இன்ஸ்பெக்டர்) இதில் கொஞ்சம் காமெடி செய்ய முயற்சி செய்து சில இடங்களில் ஜெயிக்கிறார். வேங்கட் ராஜ் பூச்சி கேரக்டரில் அசத்தல் பெர்பார்மன்ஸ். மீண்டும் அவர் மெயின் வில்லனுக்கு பின்புறம் நிக்க வேண்டியிருக்காது என்றே தோன்றுகிறது. பருத்திவீரன் சுஜாதா மற்றும் சௌந்தர் தம் வேடங்களை நிறைவாய் செய்திருக்கிறார்கள்.

இசை வெங்கட் க்ரிஷி- சிறப்பாக இருந்திருக்கலாம். பின்னணி இசையும் தேவையற்ற இடங்களில் பாடல்களும் படத்தின் ஓட்டத்தை மேலும் மந்தமாக்குகிறது. நா. முத்துகுமாரின் வரிகள் பேபி லோகேஸ்வரி பாடிய "அம்மா ரொம்ப" பாடலில் ஜொலிக்கிறது. ஆர். கண்ணனின் இயக்கம் போரடிக்காமல் கொண்டு செல்கிறது.