Monday, June 23, 2014

இராமநாதபுரம் மாவட்டம் ஒரு பார்வை


இராமநாதபுரம் மாவட்டத்தை பல்லவர்கள் ஆண்டு வந்ததிற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. குன்றக்குடியிலும் பிள்ளையார் பட்டியிலும் பூங்குன்றத்திலும் காணப்படும் பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில்கள் இராமநாதபுர மாவட்டத்துடன் பல்லவர்களுக்கிருந்த தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

பல்லவர்களுக்குப் பிறகு சோழர்களின் ஆட்சியின் கீழ் இராமநாதபுர மாவட்டம் இருந்து வந்தது. பிறகு 13 ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்கள் வசம் இருந்தது. கி.பி. 1331 இல் மதுரையைத் தலைநகராய்க் கொண்டு முஸ்லீம் ஆட்சி நிறுவப்பட்டது. கி.பி. 1371 இல் மதுரை சுல்தான்களின் ஆட்சி சரியத் தொடங்கி கி.பி. 1393 இல் முற்றிலும் அழிந்தது. அதன் பிறகு நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.

கி.பி. 1605 இல் சேதுபதிகளின் ஆட்சி பொறுப்பில் இராமநாதபுரம் மாவட்டம் இருந்தது. சேதுபதிகளுள் கிழவன் சேதுபதி குறிப்பிடத்தக்கவர். கி.பி. 1674 முதல் கி.பி. 1710 வரை இவர் ஆட்சி புரிந்தார். இவர் காலத்தில்தான் இராமநாதபுரம் சேதுபதிகளின் தலைநகரமாயிற்று.

கர்நாடக நவாப்பான முகமது அலி கிழக்கிந்தியக் கம்பெனியாரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதிகளைக் கைப்பற்றினான். இதனால் கி.பி. 1772லிருந்து 1780 வரை இராமநாதபுரம் மீண்டும் முஸ்லீம் ஆட்சியில் இருந்தது. இந்த ஆட்சியில் இராமநாதபுரம் மாவட்டம் கப்பம் கட்டும் அடிமைப் பிரதேசமாயிற்று. பிறகு கிழக்கிந்தியக் கம்பெனியாரின் திறமையாலும் சூழ்ச்சியாலும் இராமநாதபுரம் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சிக்கு மாறியது. மதுரை மாவட்டம் அமைவதற்கு முன்பே இராமநாதபுரத்தில் ஆங்கிலேயரின் ஆட்சி ஏற்பட்டு விட்டது.

1797 ஆம் ஆண்டில் இராமநாதபுரத்தில் ஏற்பட்ட பெரிய கலகத்தை அடக்கும் பொருட்டு, கிழக்கிந்தியக் கம்பெனியார் ஜாக்சன் என்பவனைத் தலைமைப் பொறுப்பில் நியமித்தனர். வரி செலுத்த மறுத்து, கலகத்துக்குக் காரணமாய் இருந்த வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கரைப் போரில் தோற்கடித்துத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

சிவகங்கையை ஆண்ட சின்னமருதுவும் பெரிய மருதுவும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நெருங்கிய நண்பர்களாயிருந்தனர். மருது சகோதரர்கள் சிவகங்கை சீமையின் சுதந்திரப் போரை நடத்தினார்கள். போரில் 1801 ஆம் ஆண்டு இறுதியில் ஊமைத்துரையும் மருது சகோதரர்களும் கைதாகி திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டு இறந்தார்கள். திருநெல்வேலி,மதுரை மாவட்டங்களிலிருந்து 1901 இல் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் 1985 மார்ச் 15 இல் மூன்றாகப் பிரிக்கப்பட்டு சிவகங்கை மாவட்டமும் விருதுநகர் மாவட்டமும் உருவாக்கப்பட்டன.

எல்லைகள்:வடக்கில் சிவகங்கை மாவட்டத்தையும், கிழக்கிலும் தெற்கிலும் வங்காள விரிகுடா வையும் மேற்கில் விருதுநகர் மாவட்டத்தையும் தூத்துக்குடி மாவட்டத்தையும் எல்லைகளாக இம்மாவட்டம் கொண்டுள்ளது.