Friday, September 5, 2014

பட்டைய கிளப்பணும் பாண்டியா - திரை விமர்சனம்


அண்ணன் தம்பியான விதார்த்தும் சூரியும் பழனி-பாப்பம்பட்டி ரூட்டில் மினிபஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனராக வேலை பார்க்கிறார்கள். பஸ்ஸில் பயணிக்கும் நர்ஸ் மனிஷா யாதவ் மீது விதார்த்திற்கு காதல். ஆனால் அவரோ இவரை ஒதுக்குகிறார். தகப்பன் இல்லாத, தாயையும் பார்வை இல்லாத தனது அக்காவையும் கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் மனிஷாவின் உண்மை நிலை அறிந்த விதார்த், மெல்ல பின்வாங்குகிறார்.. ஆனால் அதுவே விதார்த் மனிஷாவுக்கு காதலை வரவழைக்கிறது.

இந்த நேரத்தில் விதார்த்தின் முயற்சியின் பேரில் அவரின் பங்காளி ஒருவர், மனிஷாவின் அக்காவை திருமணம் செய்ய முன்வருகிறார்.. திருமணம் நாளை என்கிற நிலையில் முன் தினம் இரவு எதிர்பாராத சோதனையை விதார்த்தும் அவரது பங்காளியும் சந்திக்கிறார்கள்.. சிக்கலில் இருந்து மீண்டார்களா.. திருமணம் நடந்ததா என்பது க்ளைமாக்ஸ்..

கதை என்று பார்த்தால் ஏற்கனவே நாம் பார்த்து சலித்த சாதாரண கதைதான். ஆனால் விதார்த்தின் பக்குவப்பட்ட பாந்தமான நடிப்பும் சூரியின் நான்ஸ்டாப் காமெடியும் அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு படத்துடன் நம்மை பயணிக்க வைக்கின்றன. விதார்த அப்படியே விக்ரமன் பட ஹீரோவின் ஜெராக்ஸ் காபி.. ஆனால் அழகான காபி..

“சுடுதண்ணிய பிரிட்ஜுக்குள்ள வைக்கிற ஒரே ஆளு நீதான்” என தனது அம்மாவை கிண்டலடிப்பது, ஒயின்ஷாப்பில் “ஊறுகாய் எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டு, நைசா சுண்டலை தூக்குறீங்களே பிரதர்” என கலாய்ப்பது என கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகனாக வலம் வரும் சூரியின் சலம்பல் படம் முழுவதையும் கலகலப்பாக நகர்த்துகிறது.

பஸ் முதலாளியாக வரும் இமான் அண்ணாச்சியும் கூட சேர்ந்துகொண்டு கும்மி அடித்திருக்கிறார். கதாநாயகி மனிஷா ஏனோ டல்லடிக்கிறார். முகத்திலும் நடிப்பிலும் விதார்த்தை கவர்ந்த அளவுக்கு நம்மை கவரவில்லை.

இளவரசு, கோவைசரளா ஜோடி ஓவர்டோஸ் தான் என்றாலும் ரசிக்கவைக்கும் எல்லைக்குள்ளேயே இருக்கிறார்கள். போலீச்ச்க இரண்டு காட்சிகளில் வந்தாலும் ஜெயபிரகாஷின் நடிப்பு கச்சிதம்.

அடிக்கடி பழனி முருகன் கோவிலை காண்பித்தபடி, அருகிலுள்ள ஊர்களுக்கு, நம்மை சுற்றிப்பார்க்க சின்னதாக ஒரு டூர் அழைத்துச் சென்றுவநதிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.. எந்தவித திருப்பங்கள் இல்லையென்றாலும் ஓரளவுக்கு ஜாலியாகத்தான் இருக்கிறது பயணம்.




Source : www.tamil247.info