Thursday, January 15, 2015

ஆம்பள திரை விமர்சனம்



இதுவரை தமிழ்சினிமாவில் சொல்லப்படாத ‘பிரிந்த குடும்பம் ஹீரோவால் ஒன்று சேர்வது’ என்ற கதையைத்தான் இந்த ‘ஆம்பள’ படத்தில் கையிலெடுத்திருக்கிறார் சுந்தர்.சி.
விஷால், வைபவ், சதீஷ் ஆகிய மூவரும் பிரபுவின் பிள்ளைகள். அதேபோல் பிரபுவின் தங்கைகளான ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகிய மூவருக்கும் முறையே ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா ஆகியோர் மகள்கள். எதிர்பாராத சூழ்நிலை ஒன்றில் பிரபுவின் அப்பாவான விஜயகுமார் மரணமடைய, அது கொலைப்பழியாக மாறி பிரபுவை வீட்டை விட்டுத் துரத்துகிறது. ஏற்கெனவே தன் மகன்களான விஷாலையும், வைபவையும் பிரிந்த துன்பத்தோடு, இப்போது தங்கை குடும்பத்தையும் பிரிந்து வாடுகிறார் பிரபு.
பிரிந்திருக்கும் அப்பா பிரபுவுடனும், தம்பி சதீஷுடனும் ஒரு திடீர் சந்தர்ப்பத்தில் கைகோர்க்கிறார்கள் விஷாலும், வைபவும். தன் தங்கை குடும்பத்துடன் மீண்டும் தன் மகன்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் மூவரையும் மூன்று அக்கா மகள்ளை திருட்டுத்தனமாக கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி ‘சூப்பர்’ ஐடியா ஒன்றைக் கொடுக்கிறார் அப்பா பிரபு. பிறகு என்ன நடந்திருக்கும் என்பது காலம் காலமாக சுந்தர்.சி. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு விளக்கமாக சொல்லத் தேவையில்லை!
படம் பற்றிய அலசல்
தனது வழக்கமான பாணியைத்தான் இப்படத்திலும் கையாண்டு கலகலப்பூட்டிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. ஹியூமரோடு சேர்த்து கிளாமரையும் கொஞ்சம் தூவிவிடுவதுதான் அவரின் இன்னொரு டெக்னிக். இப்படத்தில் அதை கொஞ்சம் அதிகமாக தூவிவிட்டார்.
கூட்டத்திற்கு ஆள் அனுப்பும் கம்பெனி வைத்து நடத்தும் விஷாலுக்கும், ஹன்சிகாவுக்கும் உண்டாகும் காதலோடு படத்தை ஆரம்பிக்கிறார்கள். ஹன்சிகாவும், விஷாலும் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் சந்தானத்திற்கு ‘ஆப்பு’ வைக்க, எஸ்.ஐ.யாக இருக்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக வேலையைவிட்டே தூக்கப்படுகிறார். கிட்டத்தட்ட முதல் 40 நிமிடங்கள் நடக்கும் இந்த காட்சிகள் ரசிகர்களை இடைவிடாமல் சிரிக்க வைத்திருக்கிறது. அதன் பிறகு சந்தானம் காணாமல் போனாலும் திரும்பவும் க்ளைமேக்ஸில் வந்து கலகலப்பூட்டி படத்திற்கு சுபம் போடுகிறார்கள்.
முதல்பாதியைவிட இரண்டாம் பாதியின் ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் மெதுவாக நகர்வது, இரட்டை அர்த்த வசனங்கள், நெளிய வைக்கும் காட்சிகள், தவிர்க்க வேண்டிய இரண்டு பாடல்கள் ஆகியவை ‘ஆம்பள’யின் பலவீனங்கள். இருந்தாலும், ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் ‘பழகிக்கலாம்….’, ‘இன்பம் பொங்கும் வெண்நிலா ரீமிக்ஸ்’ இரண்டும் கலர்ஃபுல் கலாட்டா. ஒளிப்பதிவும் கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது!
நடிகர்களின் பங்களிப்பு
நடிப்பதற்கெல்லம் இப்படத்தில் யாருக்கும் பெரிய வேலையில்லை. இருந்தாலும் ஹீரோ விஷால் ரொமான்ஸ், ஃபைட் ஆகிய இரண்டு ஏரியாக்களிலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறார். ‘அரண்மனை’யில் பேயாக அலையவிட்ட ஹன்சிகாவை ‘ஆம்பள’யில் கிளாமர் குயினாக காட்டி சமாதானப்படுத்தியிருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோ நிச்சயமாக சந்தானம்தான். படத்தின் முதல் 40 நிமிடங்களையும், கடைசி 30 நிமிடங்களையும் ஒற்றை ஆளாக நின்று நகர்த்திக் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். மற்றபடி வைபவ், சதீஷ், பிரபு, ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, வில்லன் பிரதீப் ராவத் ஆகியோர் அவர்கள் சம்பந்தப்பட் காட்சிகளை நகர்த்துவதற்குத் தேவையான அளவு கை கொடுத்திருக்கிறார்கள். தெலுங்கு வரவுகளான மதூரிமா, மாதவி லதாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு காட்சிகள் கொடுக்கப்படவில்லை.