Wednesday, January 14, 2015

ஐ திரை விமர்சனம்னது உடலில் வைரஸை செலுத்தி அகோரமாக மாற்றிய ஒரு கும்பலை அதே பாணியில் தண்டிக்கும் ஒரு ஹீரோவின் கதைதான் ஐ.

அரதப் பழசான கதைதான். ஆனால் மேக்கிங்கில் சிகரம் தொட்டிருக்கிறார் சங்கர். படத்தில் மொத்தம் ஐந்து வில்லன்கள்.

ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றே தீருவது என்று கடினமாக உழைக்கும் லிங்கேசனாக சீயான் விக்ரம். தனக்கு போட்டியாக வருவானோ என்று விக்ரமை மிரட்டி வாபஸ் வாங்கச்சொல்லும் சக போட்டியாளர் ரவி (வில்லன் நம்பர்-1). இருவருக்குமான மோதலில் விக்ரம் ஜெயிக்கிறார்.

மாடலிங் துறையில் இந்திய அளவில் டாப்பில் இருக்கும் தியா (எமி ஜாக்சன்) மீது விக்ரமுக்கு செம கிரேஸ். தியாவுடன் நடிக்கும் ஆண் மாடல் ஜான் என்பவரால் (உபன் பட்டேல் -வில்லன் நம்பர்-2) அவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார். அவரை வெறுத்து ஒதுக்குவதால் பல விளம்பரப் படங்களிலிருந்து தியா கழட்டி விடப்படுகிறார். அந்த இடத்திற்கு விக்ரமை கொண்டு வருகிறார் தியா. சீனாவில் நடைபெறும் விளம்பரப் போட்டியில் லோக்கல் லிங்கேசனை ' லீ ' யாக மாற்றியதுடன், தன்  இதயத்திலும் இடம் கொடுக்கிறார் தியா. லீ-தியா ஜோடி இந்திய விளம்பர உலகில் கொடிகட்டி பறக்கிறது.ஜான் அனைத்து விளம்பர கான்ட்ராக்டிலி- ருந்தும் நீக்கப்படுகிறார். அதனால்தான்  ஜான் ' இரண்டாவது ' வில்லனாக மாறுகிறார்.

விக்ரமின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஓஜஸ் ராஜானிக்கு விக்ரம் மீது ஒருதலைக் காதல். தியாவுடன் கொண்ட காதலால், அந்த 'நயன்'தாராவை விக்ரம் வெறுத்து ஒதுக்க, அவர் ' வில்லன் நம்பர்- 3 ' இடத்துக்கு மூர்க்கமாக முன்னேறுகிறார்.  

விளம்பரப் படத்தில் நடித்தாலும் தனக்கென்று ஒரு பாலிசியை வைத்திருக்கிறார் விக்ரம். அதாவது கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களின் விம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்பதுதான் அப்பாலிசி. அதனால் தன்னை வளர்த்து ஆளாக்கிய விளம்பர நிறுவனத்தின் ஒனராகிய ராம்குமார்( நடிகர் திலகத்தின் மூத்த புதல்வன்) உடன் பகை வருகிறது. அதன்மூலம் வில்லன் நம்பர் -4 வது இடத்துக்கு அவர் போட்டியின்றி தேர்வாகிறார்.

ஐந்தாவதாக, கூட இருந்தே ஒருவர் குழி பறிக்கிறார். படத்தில் இருக்கும் ஒரே ஒரு டிவிஸ்ட் அது என்பதால் ஐந்தாவது வில்லனை தியேட்டரில் சென்று பாருங்கள். ' சைடு வாகு எடுத்து சாஃப்டா பேசினா சரத்பாபுனு நெனச்சியா..'  என்று அவரை அறிமுகப்படுத்தும் அந்த இடம் செம்ம.

இப்படி வில்லனாகிப் போன ஐந்து பேரும் தமிழ் சினிமா திரைக்கதைப்படி கடைசியில் ஒன்று சேர்கிறார்கள். விக்ரமை பொட்டுனு தீர்த்து விடக்கூடாது. அதுக்கும் மேல..அதுக்கும் மேல..அதுக்கும் மேல..ஏதாவது செய்யணும் என்று திட்டம் போடுகிறார்கள். அதுதான் விக்ரம் உடம்பில் ' I ' வைரஸை செலுத்தி அவரை உருக்குலைப்பது. அசத்தலாக இருக்கும் விக்ரம் அகோரமாக மாறுகிறார். அதனால் தியாவுடன் அவருக்கு நடக்கவிருந்த கல்யாணமும் நின்றுவிடுகிறது. அந்த ஐந்தாவது வில்லன் தியாவுக்கு மாப்பிள்ளையாக மாறுகிறார்

கடைசியில் அவர்கள்  மூலமாகவே தனக்கு நடந்த கொடூரத்தை அறியும் விக்ரம், அதே பாணியில் ஒவ்வொருவரையும் சாகடிக்காமல் 'அதுக்கும் மேல' அந்நியனை விட கொடூர தண்டனை வழங்குகிறார். 

முதல் பாதி ஏனோ ஜவ்வாக இழுக்கிறது. பிறகு நீளம் குறைக்கபடலாம். பாடல்களிலும் காட்சிகளிலும்  ஃபேர் அண்ட் லவ்லி , கில்லட் உள்ளிட்ட நிறைய அழகு சாதனப் பொருட்கள் வருவதால் விளம்பரப் படம் பார்ப்பது போன்று உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

சந்தானத்தின் காமெடி உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது. கடைசியில் உருக்குலைந்து கிடக்கும் வில்லன்களிடம்  சென்று தனித்தனியாக பேட்டி எடுப்பது செம ரகளை. பவர் ஸ்டார் கூட சில காட்சிகளில் வந்து பன்ச் டயலாக் அடித்து பரவசப் படுத்துகிறார்

தமிழ் சினிமாவின் பொக்கிஷமான விக்ரம் என்ற மகா கலைஞனின் உழைப்புக்காக ஒருமுறை பார்க்கலாம்.