Monday, January 12, 2015

பொங்கல் பண்டிகை முதல் முடிதிருத்துவதற்கான கட்டணம் உயர்வு



தமிழக ஆண்கள் இனிமேல், தலைக்கு மேல செலவு அதிகரித்துவிட்டதாக கூறிக்கொள்ள வேண்டும் போல, ஏனெனில், தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகை முதல், முடிதிருத்துவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில், முடி திருத்தும் மற்றும் சவரம் செய்வதற்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. பொங்கலுக்கு பிறகு இக்கட்டண உயர்வு தமிழகம் முழுவதிலும் அமலுக்கு வருகிறது.

சங்கத்தின் மாநில தலைவர் முனுசாமி இதுகுறித்து கூறியது: கடை வாடகை, பணியாளர் சம்பளம், உபகரணங்களின் விலை போன்றவற்றின் அதிகரிப்பு காரணமாக, கட்டிங், ஷேவிங் கட்டணங்களும் கூட்டப்படுகிறது. 2 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இதுபோல கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பதால் வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். 

புதிய கட்டண உயர்வுப்படி, கட்டிங்கிற்கு ரூ.100, கட்டிங் மற்றும் ஷேவிங்கிற்கு ரூ.150 செலுத்த வேண்டிவரும். , ஷேவிங் மட்டும் என்றால் ரூ.60 கட்டணம். சிறுவர் கட்டிங், சிறுமியர் கட்டிங்கிற்கு கட்டணம் ரூ.100. மொட்டையடித்தலுக்கு ரூ.80 கட்டணம். தாடி ட்ரிம் செய்ய ரூ.60 கட்டணம். ஹேர் டையிங்கிற்கு ரூ.150ம், ஹேர் கலரிங்கிற்கு ரூ.200ம், பேஷியலுக்கு ரூ.150ம், தலை கழுவுதலுக்கு ரூ.40ம், முடியை உலர்த்த ரூ.40ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஏசி வசதி கொண்ட முடிதிருத்தும் நிலையங்களில் கட்டண உயர்வு மேலும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு ஏசி வசதி கொண்ட முடிதிருத்தும் நிலையத்தில், கட்டிங்கிற்கு ரூ.150, கட்டிங் மற்றும் ஷேவிங்கிற்கு ரூ.200, வெறும் ஷேவிங்கிற்கு ரூ.80 வசூலிக்கப்படும்.