Thursday, March 14, 2013

ஒன்பதுல குரு - திரை விமர்சனம்


"இளைய தளபதி விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார், இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் "ஒன்பதுல குரு".
வினய், சத்யன், அரவிந்த் ஆகாஷ், சாம்ஸ், பிரேம்ஜி ஐவரும் கல்லூரி நண்பர்கள். கல்லூரி காலம் முடிந்து இந்த ஐவரில் வினயக்கு ஒரு குண்டு பெண்ணுடன் கட்டாய திருமணமும், சத்யனுக்கு வசதியான வீட்டோடு மருமகன் எனும் அடிமை வாழ்க்கையும், அரவிந்த் ஆகாஷ்க்கு காதல் திருமணம் என்றாலும் கசக்கும் திருமணவாழ்க்கையாகவும் அமைந்து விட, மூவரும் இல்லற வாழ்க்கையை வெறுத்து மீண்டும் பேச்சுலர் ஆகும் முடிவோடு வீட்டை விட்டு பெங்களூர் ஓடுகின்றனர். போகும்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் தங்கள் நண்பன் சாம்ஸையும் கூட்டிக் கொண்டு, பெங்களூருவில் காஸ்ட்லியான கள்ளக்காதல் வாழ்க்கை நடத்தும் பிரேம்ஜியின் தயவில் ஜாகையும், வேலையும் தேடிக்கொண்டு ஜாலி வாழ்க்கை வாழ்கின்றனர்.

இவர்களின் ஜாலி புத்தியை தெரிந்து கொண்டு அழகி லட்சுமிராய், நால்வரையும் மிரட்டி கடத்தி கோடிக்கணக்கில் பணம் பறிக்கிறார். அவரிடமிருந்து தப்பித்தால் போதுமென்று எஸ்கேப் ஆகும் நால்வரும், இல்லறமே இனிய அறம் என்று மீண்டும் தங்களது மனைவிமார்களைத் தேடி வருவதே "ஒன்பதுல குரு படத்தின் ஒட்டுமொத்த கதை! இந்த ஐந்தாறு வரிக் கதையை காமெடியாக எடுக்கிறேன் பேர்வழி... என ஆங்காங்கே கடித்தாலும், பெருவாரியாக சிரிக்கும் படியும், ரசிக்கும்படியும் எடுத்து ஜெயித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பி.டி.செல்வகுமார் என்பது ஆறுதல்!

வினய், சத்யன், அரவிந்த், சாம்ஸ், பி‌ரேம்ஜி ஐவருக்குமே சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மெய்யாலுமே ஹீரோ வினய்க்கு ‌பெரிய மனசுதாங்க... அந்த குண்டுப்பெண் கீதாசிங் ஜோடியாக நடிக்க சம்மதித்தற்காகவும், மேற்படி ஐவரில் ஒருவராக நடித்ததற்காகவும் வினய்யை பாராட்டலாம்!

பெங்களூர் அழகி சஞ்ஜனவாக வரும் லட்சுமிராய்யும், குமுது டீச்சராக வரும் சோனாவும், கவர்ச்சி ப்ளஸ். ஆனால் லட்சுமிராய் திடீரென்று நால்வரிடமும் துப்பாக்கியை காட்டி மிரட்டுவது நம்பமுடியாத ஹம்பக்! கீதாசிங், கார்த்திகாஷெட்டி, ரூபாஸ்ரீ மூவரும் ஓ.கே. சத்யனின் மாமியாராக மாஜி நாயகி மந்த்ராவா ஓவரப்பா!

"கேவின் இசையில் எக்கச்சக்க பழைய பாடல்கள் இப்படத்தின் கதையில் சிட்சுவேஷனுக்காக என்றாலும் டூ-மச்! சாரி, பெட்டர்லக் நெக்ஸ்ட்டைம்! செல்லதுரையின் ஒளிப்பதிவும், கே.எஸ்.ரவிக்குமார், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட இயக்குநர்களின் பங்களிப்பும் படத்தின் பெரும்பலம்!

பி.டி.செல்வகுமாரின் எழுத்து, இயக்கத்தில் கோர்வையாக கதை சொல்லப்படாவிட்டாலும், "ஒன்பதுல குரு", ஒன்பதுல குருவாக இல்லாவிட்டாலும் ஏழ‌ரைச்சனியாக இல்லாதது ஆறுதல்!

நன்றி: தினமலர்