Wednesday, June 26, 2013

ஆபாச படங்களை வெளியிட்ட 39 இணையத் தளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை


இணைய தளங்கள் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டாலும் பொழுது போக்கு அம்சம் என்ற பெயரில் கலாசார சீரழிவுக்கு வித்திடுகிறது. சில இணைய தளங்கள் ஆபாச படங்களை வெளியிட்டு இளைய சமுதாயத்தை கெடுக்கிறது.

நல்ல விஷயங்களுக்காக இணைய தளத்தில் தேடினாலும் ஆபாசம் அங்கும் ஏதாவது ஒரு வகையில் வந்து புகுந்து விடுகிறது. ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தும் இணைய தளங்கள் மூலம் பரவச் செய்கிறார்கள். இணைய தளத்தில் சென்றால் யார் வேண்டுமானாலும் ஆபாச படம் பார்க்கலாம் என்ற நிலை உள்ளது. இதனால் இளைய சமுதாயம் சீரழியும் நிலை உருவாகி இருப்பதாக மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

ஆபாச படங்கள் வெளியிடும் இணைய தளங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடப்பட்டன. இது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது.

இணைய தள இணைப்புகள் தொலை தொடர்புத்துறை மூலம் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஆபாச படங்கள் வெளியிடும் இணைய தளங்களை தொலைத் தொடர்புத்துறை மூலம் முடக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

எந்தெந்த இணைய தளங்கள் ஆபாச படங்களை வெளியிடுகின்றன என்பதை தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையம் கண்காணித்தது. இதில் 39 இணைய தளங்கள் முறைகேடாக ஆபாச படங்களை வெளியிட்டு வருவது கண்டுபிடித்தது.

இது போன்ற ஒளிபரப்புகளை தடுக்க சட்டத்தில் இடம் உள்ளதா என்றும் ஆலோசிக்கப்பட்டு அதற்கான சட்ட விதிமுறைகளும் ஆலோசிக்கப்பட்டன. இதையடுத்து 39 இணைய தளங்கள் முடக்கப்படுகின்றன.