Wednesday, June 26, 2013

சென்னையில் கோழி தட்டுப்பாட்டால் சிக்கன் பிரியாணி விலை உயர்வு


சென்னையில் கடந்த சில நாட்களாக கறிக்கோழி தட்டுப்பாடு காரணமாக சிக்கன் விலை மளமள வென உயர்ந்தது.


1 கிலோ கோழிக்கறி ரூ.160-ல் இருந்து 240 வரை விலை உயர்ந்தது. கோழி தட்டுப்பாடு காரணமாக மட்டன் விலையும் அதிகரித்தது.

இதனால் அசைவ ஓட்டல்களுக்கு போதிய அளவு மட்டன்-சிக்கன் கிடைக்காததால் உணவு வகைகளின் விலை உயரத் தொடங்கி விட்டது.

சாலையோர கடைகளில் கால் பிளேட் சிக்கன் பிரியாணி இதற்கு முன்பு ரூ.45-க்கு கிடைத்தது. ஆனால் இப்போது 10 ரூபாய் உயர்ந்து 55 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 1/2 பிளேட் பிரியாணி ரூ.90-ல் இருந்து ரூ.100ஆக உயர்ந்துள்ளது.

முழு பிளேட் பிரியாணி ரூ.180-ல் இருந்து ரூ.200ஆகி விட்டது.

இதேபோல் தந்தூரி, சில்லி சிக்கன் உள்பட அனைத்து வகை கோழிகறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

வண்ணாரப்பேட்டையில் சாலையோர பிரியாணி கடை நடத்தும் வியாபாரி முகமது கூறுகையில், கோழி விலை உயர்ந்துள்ளதால் நாங்களும் விலை உயர்த்த வேண்டி உள்ளது.

பிரியாணியின் தரம்தான் எங்களுக்கு முக்கியம். அதனால் தரத்தை குறைக்காமல் வழங்குவதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பிரியாணி வாங்குகிறார்கள். 10 ரூபாய் அதிகம் என்றாலும் அதை யாரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

பிரியாணிக்கு தேவைப்படும் தக்காளி, இஞ்சி போன்ற பொருட்களின் விலையும் அதிகமாகி விட்டதால் பிரியாணி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரியாணி விலை உயர்ந்தாலும் பிரியாணி கடைகளில் கூட்டம் குறைய வில்லை. எப்போதும்போல் வியாபாரம் நடைபெறுகிறது.