Tuesday, July 23, 2013

நடிகை மஞ்சுளா விஜயகுமார் மரணம்


நடிகை மஞ்சுளா இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் கணவர் நடிகர் விஜயகுமாருடன் வசித்து வந்தார் மஞ்சுளா. சில மாதங்களாக நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் கட்டிலில் படுத்திருந்தபோது தவறி கீழே விழுந்தார். கட்டிலின் கால் பகுதி அவரது வயிற்றில் குத்தியது. இதில் வயிற்றில் ரத்தம் உறைந்தது. இதையடுத்து மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் இல்லை. இதையடுத்து சிறுநீரகம் பழுதடைந்தது. இன்று காலை மஞ்சுளா உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து பகல் 11.30 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார். அப்போது விஜயகுமார், மகன் அருண் விஜய் மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்தனர். 1965ம் ஆண்டு ‘சாந்தி நிலையம்' படத்தில் சிறுமியாக அறிமுகம் ஆனார் மஞ்சுளா. பின்னர் ‘ரிக்ஷாக்காரன்' படத்தில் கதாநாயகியாக எம்ஜிஆருடன் நடித்தார்.

தொடர்ந்து சிவாஜி, என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கமல், ரஜினி உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்தார். ‘உன்னிடம் மயங்குகிறேன்' என்ற படத்தில் விஜயகுமாருடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் எம்ஜிஆர் திருமணம் நடத்தி வைத்தார். கடைசியாக 2011ம் ஆண்டு வெளியான ‘என் உள்ளம் தேடுதே' படத்தில் மஞ்சுளா நடித்தார்.

விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா. ஆனாலும் விஜயகுமாரின் முதல் மனைவி குடும்பத்தினருடன் இணக்கத்துடன் வாழ்ந்து வந்தார். விஜயகுமார், மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். முதல் மனைவியின் மகன்தான் நடிகர் அருண் விஜய். மஞ்சுளா உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆலப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை அவரது இறுதி சடங்கு நடக்கிறது. திரையுலகினர் ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.