Tuesday, July 23, 2013

ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு தேனியில் ஸ்டாலினுக்கு வரவேற்பு



தேனி வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு, ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க., இளைஞர் அணி நேர்காணல், கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று, தேனி வந்தார். அரண்மனைப்புதூர் விலக்கு அருகே தாரை, தப்பட்டை, செண்டை மேளம், சரவெடிகள் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாதுகாப்பு வாகனம் சென்றதும், ஸ்டாலின் காரை, தொண்டர்கள் சூழ்ந்தனர். அப்போது, பேரூராட்சி தலைவர் ஒருவர், 100, 500 ரூபாய் நோட்டுகளை, ஸ்டாலின் வாகனத்தின் மீது, வீசி, வினோத வரவேற்பு கொடுத்தார். இவ்வாறு, ரூபாய் நோட்டுக்களை, நான்கு முறை பறக்க விட்டார்.
அந்த ரூபாய் நோட்டுக்களை எடுக்க, தொண்டர்கள், இடித்து தள்ளினர்; சிலர் ஸ்டாலின் கார் மீதும் விழுந்தனர். ஆத்திரமடைந்த தி.மு.க., நிர்வாகிகள் சிலர், "என்னதான் வசதி இருந்தாலும், லட்சுமி வடிவமான ரூபாயை, தூக்கி வீசலாமா' என, கண்டித்தனர். சில இடங்களில், ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள், கோஷ்டி தகராறால் அகற்றப்பட்டன. சில இடங்களில், அவை கிழிக்கப்பட்டிருந்தன.

Source : Dinamalar