Saturday, July 27, 2013

பட்டத்து யானை திரை விமர்சனம்


காரைக்குடியில் இருந்து ஹோட்டல் வைப்பதற்காக திருச்சிக்கு சந்தானத்துடன் வருகிறார்கள் விஷால் அண்ட் டீம். வந்த இடத்தில் ஹீரோயின் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட ஒரு சிக்கலில் தலையிடுகிறார் விஷால். அது கடைசிவரையிலும் தொடர்ந்து வர.. விஷாலுக்கு இருக்கும் சஸ்பென்ஸ் காட்சிகளுடன் இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்து கிளைமாக்ஸ்வரைக்கும் நீள்கிறது.. அவ்வளவுதான் கதை..!

படத்தின் துவக்கத்தில் இருந்தே படத்தைத் தன் தோள் மீது சுமந்திருக்கிறார் சந்தானம். ஆனாலும் அதுக்காக இப்படியா..? காமெடி வசனம் என்பது பார்க்கும் நபரையெல்லாம் நக்கல் செய்வதும்.. 3 வரிகளில் தொடர்ச்சியாக எதுகை, மோனையில் பேசுவதும்தான் என்று யாரோ சந்தானத்திற்கு சொல்லியிருக்கிறார்கள் போலும்.. அதை பழைய படங்களின் ஸ்டைலையே இதிலும் தொடர்ந்திருந்தாலும் சிற்சில இடங்களில் நகைக்க வைத்திருக்கிறார். திரைக்கதையின் சுவாரசிய ஓட்டத்தில் சந்தானத்தின் இந்த கனெக்ட்டிவிட்டிதான் நம்மை சீட்டில் உட்கார வைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..!


விஷாலுக்கு அதே நடிப்புதான்.. அவன் இவனுக்கும் இந்தப் படத்துக்கும் எத்தனை வித்தியாசம் நடிப்பில் என்று போட்டியே வைக்கலாம்..! இடைவேளை பிளாக்கில் தான் யார் என்பதை சீரியஸாக சொல்லும்போதுதான் விஷால் சிரமப்பட்டு நடித்திருக்கிறார் போலும்.. சண்டை காட்சிகளை அமைத்தவரின் புண்ணியத்தில் ஆக்சன் ஹீரோவாக அதகளம் செய்து தப்பித்து கொண்டிருக்கும் ஹீரோக்களில் விஷாலும் ஒருவர் என்பதால் ஆக்சனில் காது கிழிகிறது..! அடி ஒவ்வொன்றும் இடியாக விழுக.. அதை வாங்கியவன் உண்மையில் செத்திருக்க வேண்டாம். ஆனாலும் இயக்குநர் பெருந்தன்மையாக சாகாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆவதாக திரைக்கதை அமைத்து நமது வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்..!


ஹீரோயின் ஐஸ்வர்யா அர்ஜூன்.. புதுமுகம் என்பதால் விட்டுவிடலாம். ஒரு ரவுண்டு வருவதே கஷ்டம்ன்னு நினைக்கிறேன்..! முகத்தையும் மீறி ஏதாவது வித்தியாசம் வேணும்.. ம்ஹூம்.. அப்பாவின் சிரிப்பு மட்டுமே வருகிறது..! நல்லவேளை டப்பிங் உத்தடசைவுகள் பொருத்தமாக இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்..! பாடல் காட்சிகளில் ஜிகினா டிரெஸ்ஸில் ஜொலித்தாலும், கனவுக்கன்னியாக வரும் வாய்ப்பு குறைவுதான்..!


குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் மயில்சாமி. மனிதர் டயலாக் டெலிவரியில் பின்னியெடுக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் சித்ரா லஷ்மணனிடம் தான் எப்படி திருடினேன் என்பதைச் சொல்லும் காட்சியில் சந்தானத்தை ஓவர்டேக் செய்திருக்கிறார் மயிலு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இது போன்ற சில காட்சிகளுக்காகவே படம் ஓடிருமா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை..!


லாஜிக்கே பார்க்காமல்தான் படம் பார்க்கணும்னு இயக்குநர் முன்னாடியே சொல்லிட்டார்.. அதுனால லாஜிக் கிலோ என்ன விலைன்னு கேக்குற டீம்ன்னு நினைச்சே படத்துக்கு போங்க.. பாருங்க..! குரு என்று சொல்லி சந்தானத்தை ஓட்டுவதும்.. அவரை சாப்பிட அனுப்பிவிட்டு இவர்கள் பின்னால் செல்ல நினைப்பதும், அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவை பார்த்துவிட்டு அவர் பின்னால் ஓடி வழிவதும் மகா லாஜிக் ஓட்டை.. ஜன்னல் வழியாக ஐஸ்வர்யாவிடம் விஷால் பேசுவது சுத்த பேத்தல்..! சித்ரா லஷ்மணன் தன் மகள் கல்யாணத்தின்போதே தனக்கு டிரான்ஸ்பர் வந்துவிட்டதாகச் சொல்லி சாப்பாட்டை பார்சல் எடுத்துச் செல்வது பூச்சுற்றல்..! மன்னாரு பற்றி போட்டுக் கொடுத்து தனது போலீஸ் வேலையைக் காட்டுவது திரைக்கதையை இழுக்கும் உத்தி.. சந்தானத்தின் காமெடியை அதிகப்படுத்த நினைத்து திரைக்கதையில் டிஸைன், டிஸைனாக ஓட்டைகளைக் குத்தி அலைய விட்டிருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன்..!


காமெடிதான் என்பதால் மக்கள் அதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க என்று நினைத்துவிட்டார்கள். அப்படியே இருந்தாலும் ஐஸ்வர்யாவை காதலிக்க வைக்கவே விஷாலின் நல்ல குணங்களை அப்படியே சீன் பை சீனாக கொண்டு வருவதெல்லாம் டூ மச்சு.. அதோடு ப்ளஸ்டூ படிக்கும் ஐஸ்வர்யாவுக்கு காதல் ஒரு கேடான்னு நாளைக்கு நிறைய பேர் கிளம்பி வரப் போறாய்ங்க.. இதுக்கும் இயக்குநர்தான் பதில் சொல்லணும்..! சீரியஸ் படம் என்றால் நடந்த கதை. அல்லது கேள்விப்பட்ட கதை என்று தப்பிக்கலாம். இதுக்கு..?


தமன் இசையில் 'என்ன ஒரு என்ன ஒரு' பாடல் மட்டுமே இனிக்கிறது..! ஆனாலும் டியூனை கேட்டால் வேறு எங்கோ போய் இடிக்குது.. கண்டுபிடிச்சிருவோம்.. மண்டைக்குள்ளேயே இருக்கு.. இறங்க மாட்டேங்குது..! பாடலுக்கான இசையைவிட்டுவிட்டு பின்னணியில் போட்டுத் தாளித்திருக்கிறார் தமன்.. முடியலை..


பூபதி பாண்டியன் நல்ல நகைச்சுவை எழுத்தாளர்.. அதுவும் சிறந்த கதை, திரைக்கதையோடு இருந்தால்தான் வொர்க் அவுட்டாகியிருக்கும். தனுஷ் கால்ஷீட் இல்லையென்ற கோபத்தில் உடனுக்குடன் விஷாலுக்காக கதையை தயார் செய்து எடுத்திருக்கிறார் போலும்.. சந்தானத்தை வைத்தே முதலில் இருந்து கடைசிவரையிலும் கதையை ஓட்டியிருக்கிறார்கள். சந்தானமும் சளைக்காமல் போராடியிருக்கிறார்.. இப்போதே சரக்கு ஸ்டாக் பஞ்சமோ என்று கேட்கும் அளவுக்கு ரிப்பீட் டயலாக்குகள் நிறையவே இருக்கின்றன.. மற்றதெல்லாம் எப்படியோ..? உடனிருக்கும் கூட்டத்தை உஷார்படுத்தினால் சந்தானத்திற்கு நல்லதுதான்..!