Wednesday, August 7, 2013

பிளாஸ்டிக்கை சாப்பிடும் மாடுகள்:பாலில் புற்றுநோய் ஏற்படுத்தும் இரசாயனம்



சென்னையில் பால் உற்பத்திக்கு உபயோகப்படுத்தும் மாடுகள் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடுவதால், அவற்றிலிருந்து பெறப்படும் பாலில் டையாக்ஸின் என்னும் இரசாயன சேர்மம் உள்ளதாகவும், இது சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புற்று நோயை கூட ஏற்படுத்திவிடலாமெனவும் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீப காலமாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மாடுகளில் 10 சதவீதம் மாடுகளுக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டிருந்தது. இதற்கு காரணமாக இருந்தது மாடுகள் அதிக அளவில் சாப்பிடிருந்த பிளாஸ்டிக் பொருட்கள்.

வீதிகளில் விடப்படும் மாடுகள் அனைத்து இடங்களிலும் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுகின்றன. ஜீரணக் கோளாறால் பாதிக்கப்படும் இந்த மாடுகள் ஒவ்வொன்றும் சுமார் 20 கிலோவிலிருந்து 25 கிலோ வரை பிளாஸ்டிக், ஹேர் கிளிப், ஊசி போன்றவைகளை சாப்பிட்டிருந்தன.

இதுப்போன்ற பொருட்களை சாப்பிடும் போது, மாடுகளால் அவற்றை வெளியே துப்பமுடியாது, எனவே இந்த பொருட்கள் அனைத்தும் அவற்றின் வயிற்றில் ஒரு பெரிய கட்டியை போல மாறி அங்கேயே ஒட்டிக்கொள்கிறது.

இது மாடுகளின் பசியை குறைப்பதோடு மட்டுமல்லாமல் அதன் பால் உற்பத்தியையும் குறைத்துவிடுகிறது.

இதுதொடர்பாக தெரிவித்த தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிரபாகரன், மாடுகள் பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால் நிறைய பாதிப்புகள் ஏற்படுகிறது. இது மாட்டின் உடல் நலத்தை மட்டும் பாதிப்பதோடு இல்லாமல், அது உற்பத்தி செய்யும் பாலின் தன்மையையும் கெடுக்கிறது.

இத்தகைய மாடுகளின் பாலில் 'டையாக்ஸின்' என்னும் இரசாயன சேர்மம் உருவாகிறது, இது புற்று நோயை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளார்.