Friday, February 28, 2014

பனி விழும் மலர்வனம் திரை விமர்சனம்

http://moretamil.com/panivizhum-malarvanam-movie-stills.html

வழக்கமாக தமிழ்ப் படங்களில் காட்டப்படுவது போன்றே காதலென்றவுடன் அருவா தூக்கி வரும் பெற்றோரைப் போலவே பொங்குகின்றனர் இருவரின் வீட்டிலும். அதிலும் கதாநாயகன் அபிலாஷின் தந்தையாக வரும் நாசர் அல்ல அவரின் தம்பி ஜவஹர் அச்சு அசலாக நாசர் போன்றே இருப்பதும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாலும் படம் முழுக்க நாசராகவே நம் மனதில் பதிந்து விடுகிறார் ஜவஹர்.

காதலுக்கு எதிர்ப்பென்றால் ஓடிப் போவது தானே தமிழ்ப் படங்களின் கலாச்சாரம் , எங்காவது சென்று வாழ்வது எனத் தீர்மானிக்கின்றனர் நாயகனும் , நாயகியும். கிடைத்த பேரூந்தில் ஏறி உட்கார்ந்து இருவரும் பயணிக்க அந்தப் பேரூந்து தேனிக்குச் செல்கிறது. எஸ்டேட்களும், அடர்ந்த வனப் பகுதிகளும் நிறைந்த அந்த மாவட்டத்தில் தாலி கட்டிக் கொள்ள கோயிலைத் தேடும் நாயகனும் , நாயகியும் சிறிய கோயில் ஒன்றினுள் சரணடைகிறார்கள்.

திருட்டுக் கல்யாணமெல்லாம் நடத்தி வைக்க முடியாது என அந்தக் கோயிலின் பூசாரி சொல்லி விடவே கால் போன போக்கில் நடக்கும் நாயகனும் , நாயகியும் எஸ்டேட் காடுகளை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்ப்பதற்காக இருக்கும் ஜீப்பில் அமர்ந்து காட்டுக்குள் செல்லும் இந்தக் காதல் பட்டாம் பூச்சிகள் அங்கு காதல் மயக்கத்தில் நேரம் போவதே தெரியாமல் சுற்றித் திரிந்து விட்டு வந்து பார்க்கும் போது டூரிஸ்ட் ஜீப் இல்லாமல் போய் விடுகிறது.

கதாநாயகன் அபிலாஷ் சட்டென்று மனதில் பதியவில்லை என்றாலும் குட்டைப் பாவாடையுடன் சுற்றித் திரியும் சானியதாரா ஓரளவிற்கு நினைவில் நிற்கிறார். வனத்துக்குள் செல்லும் கதாநாயகி மீது படுகிறது அங்கு சுற்றித் திரியும் கயவர்களின் கண்கள். கயவர்களிடமிருந்து காதலியைக் காப்பாற்ற போராடும் போது தான் திரையில் தோன்றுகிறார் படத்தின் உண்மையான கதாநாயகி வர்ஷா.

கையில் சிறுவனுடன் கயவர்களுடன் போராடி காதல் ஜோடிகளை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்துச் செல்லும் மறத் தமிழச்சியாக ஒரு புறம், நோய்வாய்ப்பட்டு ஆபரேஷனுக்காக காத்திருக்கும் சிறுவனின் தாயாக மற்றொரு புறமென படம் பார்ப்பவர்களின் மனதில் பதிகிறார் வர்ஷா.

அதன் பின்னர் படம் முழுவதும் காட்டில் தான். அடர்ந்த காடுகளின் இயற்கை அழகையும் , வன விலங்குகளையும், சுற்றுச் சூழலையும் மையமாக வைத்து புலியுடன் சேர்த்து நம்மை மிரட்டும் இடைவேளைக்குப் பின்னரான காட்சிகளில் ஒளிப்பதிவிற்கும், வசனங்களுக்கும், வித்தியாசமான ஹாலிவூட் பார்வையுடன் கூடிய ஒரு முயற்சிக்கும் சபாஷ் சொல்லலாம்.

நெஞ்சு வலியால் அவதிப்படும் சிறுவனை அடர்ந்த காடுகளின் வழியே மருத்துவமனை கொண்டு செல்லும் போது புலியிடம் சிக்கிக் கொள்கிறார்கள் அனைவரும். புலிக்குப் பயந்து மரக்கிளையில் ஏறி நிற்பவர்களை, எப்படியும் கீழே வந்து தானே ஆகணும் , சாப்பிடாம போக மாட்டேன் நீயா, நானா பாத்துருவோம் என உறுமலுடன் காத்துக் கொண்டிருக்கிறது புலி.

புலிக்காட்சிகள் அனைத்தையும் நியூ யார்க்கில் வைத்து படமாக்கி இருக்கிறார்கள். தத்ரூபமாக நிஜ புலியை வைத்து அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் நம்மையும் மிரளவே வைக்கிறது. புலியா , மனிதர்களா என்பது தான் கிளைமாக்ஸ்

தாயன்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொதுவானது. தாய்மையின் சிறப்பையும், பெற்றோர்களின் மகத்துவத்தையும் உணர்த்தியிருக்கும் இந்தப் படத்தை கண்டிப்பா குடும்பத்தோட பார்க்கலாம்