Thursday, July 24, 2014

திருமணம் எனும் நிக்காஹ் திரை விமர்சனம்



வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிக்கும் போது, மதம் தான் அந்த காதலுக்கு முதல் எதிரியாக இருக்கும். ஆனால், ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களின் காதலுக்கு அவர்களுடைய மதமே எதிரியாக வருகிறது என்பதை சொல்லும் படம் தான் 'திருமணம் எனும் நிக்காஹ்'.

ரயிலில் கோவைக்குச்  செல்லும் ஜெய், கடைசி நேரத்தில் டிராவல் ஏஜென்சி மூலம் அபுபக்கர் என்ற பெயரில் பயணிக்கிறார். அதே போல நாயகி நஸ்ரியா நசீம், தனது தோழி ஆய்ஷா பெயரில் அதே ரயிலில் பயணிக்கிறார். ஆனால், இருவரும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

ரயில் பயணத்தில் தொடங்கும் இவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மாறுகிறது. நஸ்ரியாவைக் காதலிப்பதற்காக தொடர்ந்து தன்னை ஒரு இஸ்லாமியராக காட்டிக்கொள்கிறார் ஜெய். அதே போல, நஸ்ரியாவும் ஜெயின் காதலுக்காக தன்னை இஸ்லாமியப் பெண்ணாக காட்டிக்கொள்கிறார். 

தங்களது காதலுக்காக, இஸ்லாமிய மதத்தைப் பற்றி, இருவரும் தெரிந்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில், இஸ்லாமிய மதத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வதற்காக, ஒரு  இஸ்லாமிய குடும்பத்திற்குள்   நுழையும் ஜெயியை, அந்த வீட்டு பெண் காதலிக்க தொடங்குகிறார்.

இந்த நிலையில், ஜெய், நஸ்ரியா இருவரும் தாங்கள் இருவரும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை தெரிந்துக்கொள்கிறார்கள். இதனால் இவர்களுடைய குடும்பத்தில், இவர்களுடைய காதலுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டு, திருமண ஏற்பாடும் நடைபெறுகிறது.

வெவ்வேறு பெயர்களில் காதலித்து வந்த இவர்கள், தங்களை மட்டும் இன்றி, தாங்கள் பொய்யாக சொன்ன மதத்தையும் உண்மையாக காதலித்ததால், தாங்கள் அந்த மதம் இல்லை என்று தெரிந்ததுமே, காதலையும் வெறுத்து இருவரும்  பிரிந்து விடுகிறார்கள்.

ஜெய், நஸ்ரியாவை பிரிந்தது, தனது பெண்ணைக் காதலிப்பதால் தான் என்று தவறுதாலாக புரிந்துக்கொள்ளும், இஸ்லாமிய குடும்பத்து பெரியவர் மற்றும் அவருடைய ஆட்கள் ஜெயியை பழிவாங்க கிளம்புகிறார்கள்.

இறுதியில், தங்களது காதலைக் காட்டிலும், தாங்கள் பொய்யாக சொன்ன மதத்தை உண்மையாக நேசித்த இந்த காதல் ஜோடி ஒன்று சேர்ந்ததா இல்லையா, ஜெயியை பழி வாங்க கிளம்பிய இஸ்லாமிய குடும்பத்தால் ஜெயிக்கு என்ன நேர்ந்தது என்பது தான் கிளைமாக்ஸ்.

வித்தியாசமான, அதே சமயம் சுவாரஸ்யமான கருவை தேர்ந்தெடுத்த இயக்குனர் அனீஸ், அதற்கு திரைக்கதை வடிவம் கொடுப்பதில் ரொம்பவே குழம்பியிருக்கிறார் என்பது, படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை நன்றாகவே தெரிகிறது.

ஜெய், எந்த வேடமாக இருந்தாலும் அதை தனது நடிப்பின் மூலம் ரசிக்க வைக்கிறார். அவருடைய நடிப்பும், கெட்டப்பும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அந்த வேடத்திற்கு அது கச்சிதமாக பொருந்தி விடுகிறது.

நஸ்ரியாவுக்கு தமிழில் இது தான் முதல் படம் என்றாலும், அவருக்கு தமிழில் வெளியான கடைசிப் படமாக இப்படம் அமைந்து விட்டது. நடிப்பைப் பொறுத்தவரையில் பெரிய வேலை ஏதும் இல்லை என்றாலும், இஸ்லாமியப் பெண், பிராமணப் பெண் என்று இரண்டு இடங்களிலும் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.

ஜெய், நஸ்ரியா இருவரை சுற்றியே முழுப் படமும் நகர்வதால், மற்ற கதாபாத்திரங்கள் பெரிதாக எடுபடவில்லை.

ஜிப்ரானின் இசையில், இரண்டு பாடல்கள் மட்டும் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம் என்று  சொல்லும் அளவுக்கு கூட இல்லை. லோகநாதனின் ஒளிப்பதிவு நஸ்ரியாவை மட்டும் இன்றி, படத்தின் அனைத்துக் காட்சிகளையுமே ரொம்ப அழகாக காட்டியிருக்கிறது.

தங்களை இஸ்லாமியர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக ஜெய் மற்றும் நஸ்ரியா கையாளும் செயல்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும், திரைக்கதையில் அந்த ரசிப்பு தண்மை இல்லாமல் போகிறது.

புதிய கரு, பொறுத்தமான நடிகர், நடிகை தேர்வு, அவர்களுடைய நடிப்பு  என்று வெற்றிக்குண்டான அனைத்து அம்சங்களும் இருந்தும், அதை படமாக்குவதில் இயக்குனர் ரொம்பவே சறுக்கியிருக்கிறார்.