Friday, August 15, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் விமர்சனம், கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம், kathai thiraikathai vasanam iyakkam movie review

நாயகன் சந்தோஷ் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவருடன் கதை விவாததத்திற்கு உதவியாக விஜய் ராம், தினேஷ், லல்லு மற்றும் தம்பி ராமையா இருக்கிறார்கள். நாயகன் சந்தோஷ் நாயகி அகிலா கிஷோரை காதலித்து வருகிறார்.

இவர்கள் காதலிக்கும்போது சந்தோஷ் இயக்குனர் ஆன பிறகுதான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் அகிலா கட்டாயத்தின் பெயரில் அகிலாவின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.

அகிலா தனியார் கம்பெனியில் வேலை செய்வதால் சந்தோஷை வீட்டிலேயே இருந்துக்கொண்டே இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய் என்று கூறுகிறார். சந்தோஷும் தன் நண்பர்களுடன் வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். இது அகிலாவிற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.

சந்தோஷ் ஒரு கதையை தயார் செய்து தயாரிப்பாளரின் சம்மதத்திற்குகாக காத்துக்கொண்டிருக்கும் வேலையில், சந்தோஷ் அகிலா இருவரின் சண்டை மேலும் வலுவடைந்து சினிமா உலகில் இயக்குனராவது கடினம் என்பதை அறிந்து அகிலா, சந்தோஷிடம் நீங்கள் இயக்குனர் ஆகும் வரை நாம் பிரிந்து வாழலாம் என்று கூறிவிட்டு பிரிந்து செல்கிறார்.

பிறகு சந்தோஷ் தயாரிப்பாளரிடம் சென்று கதையை கூறி இயக்குனரானாரா? அகிலாவுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

இயக்குனர் பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிதானாமாக யோசித்து ஒரு கதையை உருவாக்க முயற்சி செய்து, அதில் கதையே இருக்கக் கூடாது என்று முடிவு செய்து படமாக்கியிருக்கிறார். குறிப்பாக இடைவேளை முடியும்போது இப்படத்தை பற்றி திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்கள் என்ன பேசிக் கொள்வார்கள், சமூக வளைய தளங்களில் கொடுக்கும் கமண்டுகளை மிக சாதுர்யமாக குழப்பி கமண்டு கொடுக்க முடியாதளவிற்கு தடுத்திருக்கிறார். இறுதிவரை இப்படத்தைப் பார்த்தப் பிறகுதான் கருத்தை சொல்ல முடியும் என்ற அளவிற்கு படத்தை இயக்கியிருக்கிறார்.

இன்றைய சினிமாவுலகில் ரசிகர்கள் எப்படி படம் பார்க்கிறார்கள் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கதையே இல்லாத ஒரு திரைப்படம் என்று சொல்லி தனக்கே உள்ள வித்தியாசமான பாணியில் ரசிகர்கள் பார்க்கும்படி செய்திருப்பது இவருக்கே உரிய சிறப்பு.

தம்பிராமையா மட்டுமே பழகிய முகமாக வைத்து மற்ற அனைவரையும் புது முகங்களாக வைத்து அவர்களை பழகிய முகமாக தெரியும்படி செய்திருப்பது பார்த்திபனின் மேலும் ஒரு சிறப்பு.

நாயகன் சந்தோஷ், நாயகி அகிலா கிஷோர் ஆகியோர் கதாப்பாத்திரத்தை உணர்ந்து புதுப்படம் என்று சொல்லமுடியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் ராம், தினேஷ், லல்லு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தம்பிராமையா ரசிகர்களுக்கு சோர்வடையவிடாமல் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். இளைஞர்களுடன் சேர்ந்துக் கொண்டு படம் முழுக்க இளைஞராகவே வலம் வருகிறார்.

இசையமைப்பாளர்கள் ஷரத், விஜய் ஆண்டனி, தமன், அல்ஃபோன்ஸ் ஜோசப் ஆகியோர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்கள். ராஜ ரத்னம் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ பார்த்திபன் போல்.