Tuesday, March 4, 2014

சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசனின் உத்தம வில்லன் போஸ்டர்



’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது. இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமல் ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

இப்படத்தில் 4 டீன் ஏஜ் வயது பெண்களின் தகப்பனாராக நிஜவயது கேரக்டரிலேயே நடிக்கிறார் கமல். அதனால் தனது இயல்பு தன்மையோடு இப்படத்தில் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பூஜாகுமார் மற்றும் அண்ட்ரியா ஆகிய இருவரும் கமலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தில் கமல் ஹாசனுடன் மூன்று கதாநாயகிகள் டூயட் பாடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. டத்தின் முதல் போஸ்டரில் இடம் பெற்றுள்ள ‘உத்தம வில்லன்’ என்ற டைட்டிலை வில்லு பாட்டில் பயன்படுத்தும் இசை கருவியான வில்லின் வடிவத்தில் அமைத்திருப்பதை பார்க்கும்போதும், அந்த காலத்து கூத்து கலைஞர்களின் முக ஒப்பனையை நினைவுப்படுத்துகிற மாதிரியான கமலின் படம் இடம் பெற்று உள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் போஸ்டர் வெளியான அன்றே சர்ச்சையும் சேர்ந்து வந்துவிட்டது. உத்தம வில்லன் முதல் போஸ்டர், வேறொரு புகழ் பெற்ற பிரான்சு நாட்டை சேர்ந்த எரிக் லபோர்க் என்ற புகைப்படக்காரரின் புகைப்படம் போலவே உள்ளது என்கிற தகவலும் இப்போது வெளியாகியுள்ளது.

பிரான்சைச் சேர்ந்த பிரபல புகைப்படக்காரரான எரிக் லபோர்க் அந்தப் படத்தை 2009-ல் தனது கேரளா சுற்றுப் பயணத்தின் போது எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை காப்பியடித்துதான் கமல் உத்தம வில்லன் படத்தில் தனது கெட்டப்பை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்படத்தில் இருக்கும் இந்த டிஸைன் கேரளாவில் மலபார் பகுதியில் கொண்டாடப்படும் தேயம் என்கிற கலையின் வடிவமாம். இந்த நாட்டியத்தின் கலைஞர்கள் இது போன்றுதான் மேக்கப் போட்டு ஆடுவார்களாம். இதனைத்தான் அந்த பிரெஞ்சு புகைப்படக்காரர் புகைப்படமாக எடுத்து தனது வலைத்தளத்தில் வைத்துள்ளார்