Friday, January 18, 2013

தன்னம்பிக்கையை நிகழ்த்தி காட்டியிருக்கும் பவர் ஸ்டாரின் அந்த துணிச்சல்




தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்,விமர்சனங்களை எல்லாம் மெல்லிய புன்சிரிப்புடன் கடந்து செல்லும் நிதானமும் இருந்தால் யாராக இருந்தாலும்,அவர்கள் நினைத்ததை ஒருநாள் அடைந்துவிட முடியும் என்பதற்கு மிக சரியான நடைமுறை உதாரணம் பவர்ஸ்டார்.

ஆரம்பத்தில் ஒரு கோமாளியாக பார்க்கப்பட்டு பின்னர் சிலகாலம் செல்ல,காமெடியனாக பார்க்கப்பட்டு இன்று நிஜமாகவே ரசிகர்கள் மத்தியில் ஒரு ஸ்டார் ஆக உருவெடுத்திருக்கிறார் என்றால் மேலே கூறிய பண்புகள் தான் காரணம்.கோமாளியாக பார்த்த சக நடிகர்கள் தொடக்கம் அவரை "நீயாநானா"நிகழ்வுக்கு அழைத்து இன்னமும் கோமாளியாக்க முயன்ற கோபிநாத் வரையில் எவருமே பவர்ஸ்டார் இந்த இடத்தை பிடிப்பார்,இத்தனை ரசிகர்களை பெறுவார் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.

2011 இல் பவர்ஸ்டார் என்றால்,அவர் யார் என்று கேட்டவர்கள் தான் அனைவரும்.ஆனால் இன்று இவரை தெரியாதவர்கள் எவரும் இருக்கமுடியாது.ஜெயா டிவி,சன் டிவி, விஜய் டிவி என்று அனைத்து தொலைக்காட்சிகளும் தங்களது நிகழ்ச்சிகளின் ரேட்டிங்கை உயர்த்திக்க பவர்ஸ்டாரை சிறப்பு அதிதியாக அழைத்துக்கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் ஷங்கரின் I படத்தில் ஒப்பந்தமான பவர், நேற்று வெளியான "கண்ணா லட்டு திங்க ஆசையா" படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் பட்டை கிளப்பியிருக்கிறார்.இந்த படத்தின் மூலம் இவருக்கு மேலும் பல ரசிகர்கள் கிடைத்திருப்பது கண்கூடு.

எச்சந்தர்ப்பத்திலும் மாறாதது அவரது புன்சிரிப்பு தான்.(அது தான் எனக்கு பிடித்ததும் கூட.(Mister Cool !)) நிகழ்வுகளில் வந்து "என் இனிய ரசிகப்பெருமக்களே" என்று கூறும்போதோ,முகத்துக்கு நேரே இழிவாக எவராவது பேசும் போதோ,மாறாதது என்னமோ அந்த வசீகர புன்னகை தான்.தனக்கு ஐம்பது லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று அன்று கூறியது கேட்டு சிரித்தவர்களில் பலர் இன்று இவர் ரசிகர்களாகி இருக்கிறார்கள்.ஐம்பது லட்சம் ரசிகர்களை பெறுவேன் என்கின்ற தன்னம்பிக்கையை நிகழ்த்தி காட்டியிருக்கும் பவர் ஸ்டாரின் அந்த துணிச்சல் எத்தனைபேருக்கு வரும்??

சினிமாவுக்குள் வந்ததற்கு காரணம் என்ன என்பதற்கு "புகழ்" என்பதே அவரின் பதிலாக இருந்தது.நினைத்ததை இருவருடங்களுக்குள் சாதித்துவிட்டார் பவர் ஸ்டார்.ஒவ்வொருத்தரிலிருந்தும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விடயம் இருக்கும்.பவர் ஸ்டாரிடம் இருந்து கற்றுக்கொள்ள பலவிடயங்கள் இருக்கின்றன.அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். தேவையற்றதை விட்டுவிடுங்களேன்!!