Saturday, April 13, 2013

அஞ்சலி ஹைதராபாத் காவல் நிலையத்தில் ஆஜர்


நடிகை அஞ்சலி ஹைதராபாத் காவல் நிலையத்தில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை. குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே வீட்டை விட்டுச் சென்றேன் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலிக்கும் இவரது குடும்பத்தாருக்கும் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை அஞ்சலி, கடந்த 8 ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தேடி கண்டுபிடித்து தரவேண்டுமென்று ஹைதராபாத் காவல்துறையில் அஞ்சலியின் சகோதரர் புகார் மனு தாக்கல் செய்தார்.

இதேபோல், அவரது சித்தி பாரதி தேவி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். சென்னை மற்றும் ஹைதராபாத் காவல்துறையினர் இப்புகார்கள் தொடர்பாக நடிகை அஞ்சலியின் இருப்பிடம் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில், அஞ்சலியின் சித்தி பாரதி தேவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அஞ்சலியைத் தேடி கண்டுபிடித்து தரவேண்டும் என மனுத்தாக்கல் செய்தார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை அஞ்சலி நேற்று இரவு 10.20 மணி அளவில் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஒரு இன்னோவா காரில் 3 பேருடன் வந்த அஞ்சலி தனியாக காவல் நிலையத்துக்குள் சென்றார். அவரிடம் காவல்துறை அதிகாரி 90 நிமிடங்கள் அதாவது இரவு 11.50 மணி வரை விசாரணை நடத்தினார்.

விசாரணை முடிந்து வெளியே வந்த அஞ்சலி, பத்திரிக்கையாளர்களிடம் தன்னை யாரும் கடத்தவில்லை. குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே வீட்டை விட்டுச் சென்றேன். தற்போது நான் மிக சோர்வாக இருக்கிறேன். தற்போது என்னால் எதுவும் பேச முடியாது. ஏன் வீட்டை விட்டுச் சென்றேன் என்று கண்டிப்பாக தெரிவிப்பேன் என்று தெரிவித்தார்.

இந்த விசாரணை குறித்து காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், அஞ்சலி எங்கு மறைந்திருந்தார். ஹைதராபாத்திலிருந்து மும்பை சென்றது எப்படி? ஹைதராபாத் திரும்பி வந்தது எப்போது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

Source : webdunia.com