Saturday, May 11, 2013

நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ., – திரை விமர்சனம்


1994ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அமைதிப் படை’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளிவந்துள்ளது. பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் வெளி வந்தால், முதல் பாகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படி பார்க்கப் போனால், இந்த நாகராஜ சோழன் நம்மை கொஞ்சம் சோதித்துப் பார்க்கிறார்.

ஏறக்குறைய 19 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வந்தாலும், இரண்டு படங்களின் மையக் கருவான ‘அரசியல்’ இத்தனை ஆண்டு காலமும் மாறாமல் அப்படியே, ஏன் ? அதை விட அதிகமான ‘சாக்கடை’ ஆக மாறிப் போயிருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை.

சாதாரண எம்எல்ஏ வான சத்யராஜ் முதலமைச்சரை மிரட்டி துணை முதலமைச்சர் பதவியைப் பெற்று விடுகிறார். காடுகளை அழித்து தொழிற்சாலை கட்ட வரும் வெளிநாட்டு சக்திகளுக்கு உதவியாக இருந்து பல கோடி ரூபாய் கமிஷன் பெறத் துடிக்கிறார். இதற்கு அதிகாரிகள் உதவாமல் போக, அவர்களை கொலை செய்கிறார். முதலமைச்சர் சத்யராஜை நெருக்க, ஆட்சியைக் கவிழ்ப்பேன் என மிரட்டி முதலமைச்சராகவும் ஆகி விடுகிறார்.

இதனிடையே, காட்டை விட்டு நகர மறுக்கும் மக்களை அடியாட்களை வைத்து அடித்து விரட்ட முயற்சிக்கிறார். இதற்கு தடையாக சீமான் இருக்க, ஒரு பக்கம் சிபிஐ யும் சத்யராஜை வலைக்க முயற்சிக்க பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.

முதல் பாகத்தில் இருந்த காட்சியமைப்புக்கள், விறுவிறுப்பு, சென்டிமெனட், அருமையான இசை, இப்படி எதுவும் இந்த இரண்டாம் பாகத்தில் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. ஆனால், மணிவண்ணன் என்ற இயக்குனர் கம் நடிகர் மட்டும் இந்த படத்தை அதிகமாகவே உயர்த்திப் பிடிக்கிறார். பல காட்சிகளில் சத்யராஜையே ஓவர் டேக் செய்திருக்கிறார்.

முதல் பாகத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் சத்யராஜ். எந்த ‘சிட்டுக் குருவி லேகியம்’ சாப்பிடுகிறாரரோ தெரியவில்லை. அந்த நக்கல், நையாண்டி அனைத்திலும் சரியான சத்யராஜ்தனம். எங்கயாவது , யாருக்காவது , ஏதாவது ‘அல்வா’ கொடுப்பாருன்னு பார்த்தால் நமக்கே அப்பப்ப கொடுத்திடறாரு…

சிபிஐ ஆபீசராகவும் சத்யராஜ். துணை முதல்வரை சந்திக்கும் போதெல்லாம் வீரமா வசனம் மட்டும் பேசிட்டு, அப்புறம் எதுவும் பண்ணாமலே போயிடறாரு. கடைசியா டெல்லில, சேர்ல உட்கார்ந்து காரியங்களை சாதிச்சிக்கிறாரு.

‘பாடி லேங்குவேஜை பவ்யமா வச்சிக்கிட்டு, சிரிச்சிக்கிட்டு செருப்பால அடிக்கிறது நீதான் மணியா’ ன்னு தனக்குத்தானே மணிவண்ணன் எழுதி சத்யராஜைப் பேச வைத்துள்ள வசனம் உட்பட படத்தில் உள்ள அனைத்து வசனத் தோரணங்களுமே கை தட்டலுக்கு உத்தரவாரதம். பல தொய்வான காட்சிகளைக் கூட இந்த வசனங்கள் காப்பாற்றி விடுகின்றன. வயசானாலும் மணிவண்ணன் கிட்ட இருக்கிற இந்த ‘வசனத்தின்’ வண்ணங்கள் அவரையும் படத்தையும் அதிகமாகவே தாங்கிப் பிடிக்கின்றன.

சீமான், கதாபாத்திரம் எதற்காகவே உருவாக்கப்பட்டு , சொல்ல வந்ததை சொல்லாமல் போய் விட்டதைப் போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. கிளைமாக்சுக்கு முன்னதாகவாவது ஏதாவது ‘புரட்சி’ செய்வார் என்று எதிர்பார்த்தால் சில ‘நறுக்’ வசனங்கள் பேசி தண்ணீரில் குதித்து விடுகிறார். நீங்களுமா மணிவண்ணன் சார் …..

சத்யராஜ் மகனாக ரகு மணிவண்ணன். இவர் நல்லவரா ? கெட்டவரா ?…மனைவி மிருதுளாவிடம் நல்ல கணவனாக இருக்கிறார். அப்பா சத்யராஜிடம் ‘சரியான’ அரசியல் வாரிசாக இருக்கிறார்.

சீமான் முறைப் பெண்ணாக வரும் கோமல் சர்மா, மணிவண்ணன், சத்யராஜின் ‘செட்-அப்’ ஆக வரும் வர்ஷா அசுவதி, மதுரை சுஜாதா இவர்களும் படத்தில் உண்டு.

இசை – ஜேம்ஸ் வசந்தன்….என்று டைட்டிலில் போடுகிறார்கள்…‘எங்கே எங்கே எங்கே என்று தேடிப் பார்தேன் அது எங்கேயும் இல்லை…’ என்றே பாடத் தோன்றுகிறது. ‘கண்கள் இரண்டையும்…’ ‘காதுகள் இரண்டையும்’ சேர்த்து வைத்து உற்று நோக்கினாலும் ஒன்றுமே தோன்றவில்லை. அதான் இசை வெளியீட்டு விழாவில் ‘இசை’ பக்கம் நான் எதுவுமே கேட்கவில்லை, எல்லாமே ஜேம்ஸ்தான் என மணிவண்ணன் சொன்னார் போலும்.

டி. சங்கரின் ஒளிப்பதிவு படமாக்கப்பட்ட இடங்கள் எங்கே என்று கேட்க வைத்துள்ளது. சத்யராஜ் இருக்கும் பங்களாவும், பின்னணியும் அழகோ அழகு.

உள்ளூர் அரசியல்வாதிகள், தமிழக அரசியல்வாதிகள் , இந்திய அரசியல்வாதிகள் என அனைவரையும் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று சரியான தொடர்பு இல்லாத துண்டு துண்டான காட்சிகள், நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியுள்ள சில காட்சிகள் என ரசிப்புத் தன்மையை குறைத்து விட்டார்கள். இருந்தாலும், மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணிக்காக ரசிக்கலாம்.

படம் முடிந்த பின் ‘என்ட் டைட்டில்ஸ்’ போடும் போது, ‘அமைதிப் படை’ முதல் பாகத்தின் சில ஹைலைட்டான காட்சிகளை இணைத்துள்ளார்கள். அதுவரை படம் பார்த்து கைதட்டிய காட்சிகளை விட இந்த ‘முதல் பாகத்தின்’ சில காட்சிகளுக்கு அனைவரும் கைதட்டி ரசித்தது, குறிப்பால் உணர்த்தப்பட்ட ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது.

‘நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ.’ – மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியின் ‘லொள்ளு சபா’….